2016-04-16 16:24:00

திருத்தந்தை பிரான்சிஸ் - Mytilene குடிமக்கள் சந்திப்பு


ஏப்.16,2016. லெஸ்போஸ் தீவு, பல தன்னார்வலப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கழகங்களால் நிறைந்துள்ளது. லெஸ்போஸ் தீவின் மக்களாகிய நீங்கள், மனித சமுதாயத்தின் இதயம் தொடர்ந்து துடித்துவரச் செய்கின்றீர்கள். புலம்பெயர்ந்த மக்கள் குறித்து கிரேக்கத்திலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் வெளிப்படுத்தப்படும் கவலைகள் புரிந்துகொள்ளத்தக்கவை மற்றும் நியாயமானவையே. எனினும், இம்மக்கள் எண்ணிக்கையில் அல்ல, முதலில் அவர்கள் முகங்களையும், பெயர்களையும், தனிப்பட்ட கதைகளையும் கொண்டிருக்கும் மனிதர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஐரோப்பா மனித உரிமைகளின் தாய்பூமி. இக்கண்டத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இதை உணர வேண்டும். கலாச்சாரத்தின் தொட்டிலாகிய இந்நிலத்தில் வாழும் லெஸ்போஸ் தீவு மக்கள், அவசரகாலத்தில் உதவுவதோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. பரந்துபட்ட அளவில் இவர்களுக்கு உதவுவதற்கு அரசியல் அளவில் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் மத்தியில் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, ஆயுத வர்த்தகம் மற்றும் மனித வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதத்தில், இஸ்தான்புல் நகரில் நடைபெறும், முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாடு, ஆக்கப்பூர்வமான தீர்மானங்களை எடுக்கும் என நம்புகிறேன். மக்கள், தங்கள் தாயகங்களைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் அகற்றப்பட வேண்டும். நாம் ஒன்றிணைந்து உழைத்தால், இதனைச் சாதிக்க முடியும். அன்போடு பணியாற்றுபவர் மட்டுமே அமைதியைக் கட்டியெழுப்ப இயலும். மனித சமுதாயத்தின் காவலர்களாகிய உங்களுக்கு நன்றி... இப்படி ஆறுதலளிக்கும் பல வார்த்தைகளைச் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.