2016-04-15 14:50:00

திருத்தந்தை : தூய ஆவிக்கு பணிவுள்ளவர்களாக செயல்படுவோம்


ஏப்.,15,2016. எந்த ஒரு கடினமான இதயமும் தூய ஆவியானவருக்குரிய பணிவுடன் தன்னைத் திறக்கும்போது, அருளையும் மாண்பையும் வழங்கி, அந்த இதயத்தை எழும்பி நிற்க வைக்கிறார் இறைவன், என இவ்வெள்ளி காலை திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் மனம் மாறிய நிகழ்வை மையமாக வைத்துத் தன் கருத்துக்காளை அளித்தார்.

தன் விசுவாசக் கோட்பாடுகளில் மிக உறுதியானவராக இருந்த காரணத்தால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்காதவராக செயல்பட்ட புனித சவுல், கிறிஸ்தவர்களை சித்ரவதைப்படுத்தி கொல்லும் நிலைக்குச் சென்றார். ஆனால், சாலையில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு, அவரை தாழ்மைப்படுத்தியதுடன், அவர் இதயத்தையும் உருக வைத்தது என்றார் திருத்தந்தை.  தன் குறிக்கோளை அடையச் செல்லும் சாலையில் பேரொளியால் சூழப்பட்ட சவுல், தற்காலிகமாக பார்வையை இழப்பதுடன், உண்மையை கண்டுகொள்ளவும் துவங்குகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சவுல் தரையிலிருந்து எழுந்த போது அவர் கண்கள் திறந்திருந்தும் அவரால் பார்க்கமுடியவில்லை, அதனால் அவரின் கை பிடித்து வழி நடத்த வேண்டியிருந்தது  என நாம் வாசிப்பது, அவரின் இதயம் இறைவனை நோக்கி திறக்கத் துவங்கியதை காண்பிக்கிறது என்றார்.

தரையில் வீழ்ந்த சவுல், தன் தாழ்நிலையை உணர்கிறார் என்பதை நாம் அறியும்போது, இறைவன் நம்மையும் தாழ்மைப்படுத்துவது, அல்லது நம்மை அவமான நிலைக்கு உள்ளாக அனுமதிப்பது என்பது, அவரை நோக்கி நம் இதயங்கள் திறக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தினாலேயே எனவும் கூறினார் திருத்தந்தை.

மூன்று நாட்கள் உண்ணாமலும் குடிக்காமலும் இருந்த பவுல், அனனியா மூலம் பார்வைப் பெற்றதை நாம் பார்க்கும்போது, இந்நிகழ்வில் மைய நபராக தூய அவியானவரைப் பார்க்கின்றோம்,  தன் பார்வையைத் திரும்ப பெற்ற பவுல், தூய ஆவியாவனவருக்கு தன்னைத் திறந்தவராக, பணிவுள்ளவராக செயலாற்றினார், இறுகிய இதயம் கொண்டவர்களக செயல்படும் நாம் ஒவ்வொருவரு,ம், அவரைப்போல் இறை அருளைப் பெற்று, தூய ஆவியானவருக்கு பணிவுள்ளவர்களாக செயல்பட உதவுமாறு இறைவனை வேண்டுவோம் என தன் மறையுரையில் அனைவரையும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.