2016-04-14 16:08:00

துணிச்சல், இரக்கம் நிறைந்த அருள்பணியாளராக விளங்குங்கள்


ஏப்.14,2016. துணிச்சலும், இரக்கமும் நிறைந்த அருள்பணியாளராக விளங்குங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை அன்புகூருங்கள் என்றும், குருத்துவப் பயிற்சிக்கு மனத்தாராளத்துடன் தங்களைக் கையளிக்குமாறும், பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி மாணவர்களை, இவ்வியாழனன்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி, குருத்துவப் பயிற்சிக்கான இடமாக மாறியதன் நானூறாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த திருத்தந்தை, புனித John Ogilvie அவர்கள் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதற்குப் பதிலாக, திருஅவையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊக்குவித்துள்ளது என்று கூறினார்.

இன்று நாமும் மறைசாட்சியக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும்,  நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உங்கள் முன்னோர், திருஅவை மற்றும் ஸ்காட்லாந்து மீது கொண்டிருந்த அன்பையே நீங்களும் கொண்டிருந்தால், இன்று நாம் நினைவுகூரும் வரலாற்றையும், அவர்களின் தியாகத்தையும் கவுரவப்படுத்துவீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஸ்காட்லாந்தில் கடும் துன்பங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தவர்களாய், அங்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, 1616ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி உரோம் நகரிலிருந்து, 16 அருள்பணியாளர்கள், துணிச்சலுடன் ஸ்காட்லாந்து சென்றதன் நானூறாம் ஆண்டை நினைவுகூரும் வகையில், பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி மாணவர்களும், அக்கல்லூரிப் பொறுப்பாளர்களும் திருத்தந்தையைச் சந்தித்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.