2016-04-14 16:19:00

திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு பயண விபரங்கள்


ஏப்.14,2016. "அன்பே, இருள் சூழ்ந்த உலகைத் தொடர்ந்து ஒளியேற்றக்கூடிய ஒரே ஒளி" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

மேலும், ஏப்ரல் 16, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் செல்வது குறித்த பயண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை 7 மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Mytileneவுக்குப் புறப்படும் திருத்தந்தை, காலை 10.20 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையம் சென்றடைவார்.

கிரேக்கப் பிரதமர், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus, கிரேக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Fragkiskos Papamanolis ஆகியோர் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்பார்கள்.

பின்னர், அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, Mòria புலம்பெயர்ந்தவர் முகாமுக்கு, சிறிய வாகனத்தில் இத்தலைவர்கள் செல்வார்கள். இம்முகாமில் ஏறக்குறைய 2,500 புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர்.

12.25 மணிக்கு, இத்தலைவர்கள் அங்கு உரையாற்றுவார்கள். 12.40 மணிக்கு பொதுவான அறிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டு வெளியிடுவார்கள். 12.45 மணிக்கு, சில புலம்பெயர்ந்த மக்களுடன் இவர்கள் மதிய உணவருந்துவார்கள். பின்னர் அந்நகர் மக்களையும் சந்திப்பார்கள். 

பிற்பகல் 2:30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசுவார். 3.15 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.