2016-04-14 15:44:00

திருத்தந்தை : தூய ஆவியாருக்குப் பணிந்து நடங்கள்


ஏப்.14,2016. தூய ஆவியாரை எதிர்க்காமல் அவருக்குப் பணிந்து நடப்பது மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

எத்தியோப்பிய அரசி காந்தகியின் நிதியமைச்சருக்கு, திருத்தூதர் பிலிப் நற்செய்தி அறிவித்தது பற்றி விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை(தி.ப.8,26-40) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கும் அருளுக்காக மன்றாடுவோம் என்று விசுவாசிகளிடம் கூறினார்.

சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தூய ஆவியாரை எதிர்ப்பவர்களை எச்சரித்த திருத்தந்தை, தூய ஆவியாருக்குப் பணிந்து நடப்பது, மகிழ்வை அளிக்கின்றது என்றும் கூறினார்.

திருத்தூதர் பிலிப், நற்செய்தி அறிவிப்பாளர், எத்தியோப்பிய நிதியமைச்சர், இயேசுவைப் பற்றி எதுவுமே அறியாதவர், ஆனால், தூய ஆவியார், இவ்விரு மனிதரில், புறணி பேசும் ஆர்வத்தை அல்ல, மாறாக, நல்லதோர் ஆர்வத்தை விதைத்தார் என்றும், இறுதியில் அலியாகிய நிதியமைச்சர் தூய ஆவியாருக்குப் பணிந்து நடந்ததில் கிடைத்த ஆவியாரின் மகிழ்வோடு திரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையை வழிநடத்திச் செல்பவர் தூய ஆவியாரே என்றும், சிறுவன் சாமுவேல் போன்று, பேசும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன் என்ற அழகான செபத்தை நாம் எப்போதும் செபிக்கலாம் என்றும், தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கும் அருளுக்காக மன்றாடுவோம் என்றும் கூறி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.