2016-04-14 15:20:00

இது இரக்கத்தின் காலம் : என்னுடைய உயிர் உங்களைவிடப் பெரியதா?


பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்து, இயேசு சபையில் சேர்ந்து, மதுரை மறைப்பணித்தளத்தில் நற்செய்திப் பணிசெய்யும் ஆர்வத்தில், தனது 24வது வயதில், தமிழகம் வந்து சேர்ந்தவர் இறையடியார் இயேசு சபை அருள்பணி லூயி லெவே. இவர் சிவகங்கை மறைமாவட்டம் ஆண்டாவூரணியில் 23 ஆண்டுகள் பங்குக் குருவாக அரும்பணியாற்றினார். அப்போது அவ்வூரில் மழையே இல்லாமல், கடும் வறட்சியால் மக்கள் துன்புற்றபோது, இவர் நெறிஞ்சி முள்ளில் முழங்காளிலிருந்து செபித்தார். மழையும் பெய்தது. 1938ம் ஆண்டில் அவ்வூர் மக்கள் காலரா நோயால் கதிகலங்கி நின்றபோது, அருள்பணி லெவே, காலராவினால் மரணத்தோடு போராடியவர்களைத் தொட்டுத் தூக்கி, அவர்களை, உடனுக்குடன் தொலைதூரத்திலிருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, ஒரு தீயணைப்புப் படைவீரரைப்போல் செயல்பட்டார். சாமி, இது கொடுமையான தொற்றுநோய், இது உங்களுக்கு வந்துவிடக் கூடாது, எங்களுக்கென்று இருக்கின்ற ஒரே நாதி நீங்கதான் சாமி என்று மக்கள் கெஞ்சிக் கேட்டபோது, என்னுடைய உயிர் உங்களைவிடப் பெரியதா?, உங்களுக்காக நான் இறந்தால், அது பெரிய பாக்கியம் இல்லையா? தன்னுடைய மந்தைக்காக உயிர் கொடுப்பதுதானே இயேசுவின் விருப்பம் என்று சொன்னார். காலராவால், ஆங்காங்கே மக்கள் இறந்துபோனதால் கதிகலங்கிய மக்கள், இறந்தவர்களை லெவே சாமி பார்த்துக்கொள்வார் என்று, வீட்டிலேயே அவர்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டனராம். ”ஓ! இயேசுவே, அன்பின் அரசரே, உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்” என்னும் சிறிய செபத்தை இவர் அடிக்கடி சொல்வார். அருள்பணியாளர்கள் இரக்கம் உள்ளவர்களாய் விளங்க வேண்டும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பொறுப்பேற்று, உடனிருந்து பயணிப்பதோடு, அவர்களின் இதயங்களில் அன்புத் தீயை மூட்டிவிட வேண்டும், நல்ல சமாரியர் போன்று உடனடியாகச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று, இந்த யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். இந்த விதத்தில், இறையடியார் லூயி லெவே இறை இரக்கத்தின் தூதுவர் என்று சொல்லலாம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.