2016-04-14 16:25:00

ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் பற்றிக் கர்தினால்கள்


ஏப்.14,2016. திருஅவையில் ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், அவற்றில் திருப்பீடத் தூதர்களின் பங்கு போன்றவை, சி-9 கர்தினால்கள் அவையின் 14வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது. 

இப்புதனன்று நிறைவடைந்த சி-9 கர்தினால்கள் அவையின் மூன்று நாள் கூட்டம் பற்றி பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அப்போஸ்தலிக்கப் புதிய சட்ட அமைப்பின் அடிப்படையில், திருப்பீடத்தில் புதிய துறைகள் உருவாக்கப்படுவது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகளை, கர்தினால்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளனர் என்று கூறினார்.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு என்ற ஒரு துறையும், நீதி, அமைதி, குடிபெயர்வோர் என்ற ஒரு துறையும் புதிதாக உருவாக்கப்படுவது குறித்த பரிந்துரைகளைக் கர்தினால்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், உடல்நிலை காரணமாக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் தவிர, மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் என்றும் திருத்தந்தை அனைத்து அமர்வுகளிலும் கலந்துகொண்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்தக் கூட்டங்கள், வருகிற ஜூன் 6-8, செப்டம்பர் 12-14, டிசம்பர் 12-14 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.