2016-04-13 14:43:00

லெஸ்போஸ் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்க அழைப்பு


ஏப்.13,2016. அண்மை மாதங்களில், ஏராளமான புலம்பெயர்ந்த மக்கள் கடந்து சென்ற லெஸ்போஸ் தீவுக்கு, வருகின்ற சனிக்கிழமையன்று தான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்குமாறு, திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு மறைக்கல்வியுரை வழங்கிய பின்னர், தனது லெஸ்போஸ் தீவுப் பயணம் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, எனது சகோதரர்கள் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus ஆகிய இருவருடன் அங்குச் செல்வதாகத் தெரிவித்தார்.

லெஸ்போஸ் தீவு மற்றும் கிரேக்க நாட்டு அனைத்துக் குடிமக்கள், இன்னும், புலம்பெயர்ந்த மக்கள் எல்லாருடனும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், நாங்கள் மூவரும் அங்குச் செல்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் மற்றும் அன்னைமரியிடம் செபிக்குமாறு கேட்டுள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் Prokopis Pavlopoulos ஆகிய இருவரின் அழைப்பின்பேரில் லெஸ்போஸ் தீவுக்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லெஸ்போஸ் தீவு, துருக்கி நாட்டுக் கடற்பரப்பில் அமைந்துள்ள கிரேக்க நாட்டுத் தீவாகும். அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், துருக்கி நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, கிரேக்க நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தவர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட வேண்டும்.  

98 விழுக்காட்டு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கிரேக்க நாட்டின் ஏத்தென்ஸ் நகருக்கு, 2001ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை சென்றது அதுவே முதன்முறையாக அமைந்தது. அடுத்து, 2016ம் ஆண்டு, ஏப்ரல் 16, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் செல்கிறார்.

மேலும், இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குடும்பங்களின் இன்னல்கள், போராட்டங்கள், மகிழ்வு மற்றும் நம்பிக்கைகளில், ஆண்டவரின் பிரசன்னம் குடிகொண்டிருக்கின்றது(315) என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.