2016-04-13 15:21:00

மறைக்கல்வி உரை : “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்”


ஏப்.,13,2016. சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், திருப்பயணிகளின் பெருமெண்ணிக்கையை முன்னிட்டு, இவ்வாரமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு வளாகத்திலேயே, திறந்த வெளியில் இடம்பெற்றது.

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என இயேசு பரிசேயர்களுக்கு வழங்கிய பதிலை மையமாக வைத்து, இன்றைய புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை. இவ்வார புதன் மறைக்கல்வி உரை நிகழ்வில், சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும் கலந்து கொண்டார்.

இரக்கத்தின் இந்த யூபிலி ஆண்டில் நாம் இன்று, புனித மத்தேயுவை இயேசு அழைத்தது குறித்து விவிலியம் விவரிப்பதை நோக்குவோம். பாவி என அக்கால மக்களால் நோக்கப்பட்ட ஒரு வரி வசூலிப்பவரை இயேசு அழைத்து அவருடன் விருந்துண்ணச் செல்வதால், பரிசேயர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாகச் செல்கிறார். நேர்மையாளர்களை அல்ல, மாறாக பாவிகளையே அழைக்க வந்தேன் என, தன் செயலுக்கு விளக்கமும் அளிக்கிறார் இயேசு.

மத்தேயுவின் அழைப்போடு தொடர்புடைய இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடம் என்னவெனில், கிறிஸ்து நம்மை தன் சீடர்களாக்கும்போது, அவர் நம் கடந்த காலத்தை உற்று நோக்குவதில்லை, மாறாக, நம் வருங்காலத்தையே மனதில் கொண்டுள்ளார் என்பதாகும்.  இறைவனின் இந்த அழைப்புக்கு நாம், தாழ்ச்சி நிறைந்த, உண்மையுடன் கூடிய இதயத்துடன் பதிலுரைக்க வேண்டும். திருவிருந்துப் பலியில் அவரோடு இணைந்து நாம் அமரவேண்டும் என விரும்புகிறார் இயேசு. இந்த நற்கருணைப் பலியின்போதுதான், இயேசு தன் வார்த்தைகளின் வல்லமையால் நம்மை புனிதப்படுத்துவதோடு, இந்த அருளடையாளத்தின் வழியாக நம்மை மேலும் நெருக்கமாக தன்னோடு இணைக்கிறார். இறைவாக்கினர் ஓசேயாவின் வார்த்தைகளான 'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதை நம் முன் எடுத்துவைக்கும் இயேசு, உண்மையான மனமாற்றத்தை இறைவன் எதிர்பார்க்கிறாரே அன்றி, மதத்தின் வெளிப்புறச் சடங்குகளை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். நாம் அனைவரும் நம் பாவங்களை உணர்ந்து அதனை ஏற்றுக் கொண்டவர்களாக, தன்னுடன் மேசையில் அமர்ந்து விருந்துண்ண இயேசு நமக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்போம். அந்த அழைப்பிற்கு இயைந்த வகையில், அவரின் முடிவற்ற இரக்கம் மற்றும் மீட்பளிக்கும் அன்பிற்கு பெருமளவு நன்றியுள்ளவர்களாக, இயேசுவுடனும், ஒருவர் ஒருவருடனும் இணக்கத்தில், திருவிருந்து பலியில் பங்குபெறுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

இம்மறைக் கல்வி உரையில் பங்கேற்ற பேராயர்கள் மற்றும் ஆயர்கள் சிலரை, அம்மேடையிலேயே ஒருவர் ஒருவராகச் சந்தித்தார். சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார். இந்த மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் இறை ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.