2016-04-13 15:21:00

இலங்கையில் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் உயர..


ஏப்.13,2016. இலங்கையில், தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்கென, பிரித்தானிய காலனி ஆட்சியில், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று, இலங்கை காரித்தாஸ் நிறுவனம் அரசை வலியுறுத்தியுள்ளது.

சமூகத்தில் ஓரங்கப்பட்டுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் ஊதியமும், குடியிருப்பு உரிமைகளும் உயர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளது காரித்தாஸ் நிறுவனம்.

இலங்கையின் வளமைக்கு முக்கிய காரணிகளாக இருப்பவைகளில் தேயிலை உற்பத்தியும் ஒன்றாகும். ஆயினும், இத்தொழிலாளர்கள், குறைந்த ஊதியம் மற்றும் போதுமான குடியிருப்பு வசதியின்றி உள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து, இலங்கை தேசிய உரையாடல் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் 325 தேயிலைப் பண்ணைகளின் தலைவர்களுடன் கூட்டம் நடத்திய, கண்டி காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு டெஸ்மன்ட் பெரேரா அவர்கள், தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தொழிலாளரின் தினக்கூலி குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வழங்கப்படுமாறு அரசை வலியுறுத்துவதாக, அருள்திரு பெரேரா அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.