2016-04-11 15:52:00

மூடிய இதயங்களுடன் தீர்ப்பிடுபவர்க்கு திருத்தந்தை எச்சரிக்கை


ஏப்.11,2016. இறைவார்த்தைக்கு மூடிய இதயம், உண்மைக்கும், இறைமக்களை முன்னோக்கிச் செல்ல வைக்கும் மற்றும், இறைவாக்கைத் தாங்கிச் செல்லும் கடவுளின் தூதுவருக்கும், மூடிய இதயமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார்.

ஸ்தேவான் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும், அரும் அடையாளங்களையும் செய்து இறைவார்த்தையைப் போதித்து வந்தபோது, அவருக்கு எதிராகப் பேசி, அவரைத் தலைமைச் சங்கத்திற்கு இழுத்துச் சென்றது பற்றிக் கூறும் இத்திங்கள் திருப்பலியின் முதல் வாசகத்தை(தி.ப.6,8-15) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானத்தோடும், தூய ஆவியாரால் நிறைந்தவராயும் பேசிய ஸ்தேவானை எதிர்த்து நிற்க இயலாதவர்கள், அவருக்கு எதிராகப் போலியாகச் சான்று சொல்ல, மக்களைத் தூண்டினர் என்றும் கூறினார். மக்களின் வாழ்வையும், மனந்திரும்பும் மக்களையும் கருத்தில் கொள்ளாமல், சட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, மூடிய இதயங்களுடன் தீர்ப்பிடுபவர்க்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார்.

அனைத்து இறைவாக்கினர்கள், மற்றும் இயேசு போன்று, மறைசாட்சி ஸ்தேவான் அவர்களின் வாழ்வும் முடிந்தது, திருஅவையின் வரலாற்றில் இது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்றும் கூறினார்.

குற்றமற்றவர்களாய் இருந்தும், பலர் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்டதை வரலாறு நமக்குக் கூறுகிறது, இந்த அப்பாவி மக்கள், இறைவார்த்தைக்கு எதிராகத் தீர்ப்பிடப்பட்டவர்கள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.