2016-04-11 15:00:00

திருத்தந்தை – கிறிஸ்துவைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி


ஏப்.11,2016. திபேரியக் கடல் அருகே இயேசு தம் திருத்தூதர்களுக்குத் தோன்றியது பற்றிக் கூறும், பாஸ்கா கால மூன்றாம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை(யோவா.21:1-19) மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி பற்றி விளக்கினார்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பைத் தொடர்ந்து, மீனவர்களாகிய திருத்தூதர்கள், தங்களின் அன்றாட வாழ்வுக்குத் திரும்புவதை, இந்நற்செய்திப் பகுதி விவரிக்கின்றது என்றும், இரவெல்லாம் மீன்பிடித்தும், மீன்கள் ஒன்றும் அகப்படாமல், காலியான வலைகளுடன் திருத்தூதர்கள் திரும்பினர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் வார்த்தையின்படி மீன்கள் ஏராளமாய்க் கிடைத்தன, கரையில் நிற்கும் இயேசுவை அறிந்து, அவர் ஆண்டவர்தான் என்று திருத்தூதர்கள் மகிழ்வோடு அறிவித்ததே, உயிர்ப்பு விசுவாசம், இது மகிழ்வும் வியப்பும் நிறைந்தது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த இயேசுவின் பிரசன்னம், அனைத்தையும் மாற்றுகின்றது என்றும், இதே உணர்வே, திருஅவையை உயிர்த்துடிப்புடன் வாழச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள், தாங்கள் சந்திக்கும் எல்லாரிடமும், குறிப்பாக, நோயுற்றோர், ஓரங்கட்டப்பட்டவர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களிடம், இந்த உயிர்ப்புச் செய்தியை அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.