2016-04-11 15:39:00

திண்டுக்கல் மறைமாவட்டப் புதிய ஆயர் தாமஸ் பால்சாமி


ஏப்.11,2016. தமிழ்நாட்டின், திண்டுக்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேரருள்திரு தாமஸ் பால்சாமி அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாக, 2007ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரைப் பணியாற்றிய, புதிய ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், தற்போது, கல்லுக்குளி புனித அந்தோணியார் ஆலயப் பங்குக் குருவாகப் பணியாற்றி வருகிறார்.

திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த என்.பூலாம்பட்டியில், 1951ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிறந்த புதிய ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில். மெய்யியல், இறையியல் கல்வியை முடித்து, 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

திருச்சி, மேலப்புதூரிலுள்ள புனித மரியாப் பேராலயம்(1977-1979) மற்றும், திருச்சி பழையகோவில் வியாகுல அன்னை ஆலயத்தில்(1979-1980) உதவிப் பங்குத் தந்தையாகவும், பின்னர் திருச்சி மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் 2007ம் ஆண்டுவரை பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார் புதிய ஆயர் தாமஸ் பால்சாமி   

2003ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திண்டுக்கல் மறைமாவட்டம், 6,266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், 1,45,213 கத்தோலிக்கரையும் கொண்டுள்ளது. இங்கு, 49 பங்குகளும், 163 அருள்பணியாளர்களும், 32 அருள்சகோதரர்களும், 365 அருள்சகோதரிகளும், 42 குருத்துவ மாணவர்களும் உள்ளனர்.

திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய, ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராகப் பணிமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மறைமாவட்டம், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து  ஆயரின்றி இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.