2016-04-11 16:06:00

கேரளாவில் வெடிவிபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


ஏப்.11,2016. கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள புட்டிங்கல் தேவி கோவில் வளாகத்தில், இஞ்ஞாயிறு காலை 3.10 மணியளவில் இடம்பெற்ற, பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவுகளுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெடி விபத்தில் பாதிக்கபட்டுள்ள மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள எல்லாருக்காகவும், வல்லமையும் அமைதியும் நிறைந்த இறையாசீர், நாட்டினர் அனைவர் மீதும் பொழியப்படச் செபிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபங்களும், அனுதாபங்களும் நிறைந்த தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.

புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது, அவ்வளாகத்தில், தடையை மீறி இருதரப்பைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 110க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 350க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வெடி விபத்தில் அங்கிருந்த கட்டடமும் இடிந்து விழுந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.