2016-04-09 13:32:00

திருத்தந்தை – தர்மம் செய்வது அன்பின் அடையாளம்


ஏப்.09,2016. அன்பு நேயர்களே, திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும், ஒரு சனிக்கிழமை காலையில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, இறை இரக்கத்தை மையப்படுத்தி, பொது மறைக்கல்வியுரை வழங்கி வருகிறார். ஏப்ரல், 9 இச்சனிக்கிழமை காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில், திறந்த காரில் வலம் வந்து, ஆசிர்வதித்த பின்னர், “இரக்கமும், தர்மம் செய்வதும்” என்ற தலைப்பில் மறைக்கல்வியுரையை வழங்கினார். தர்மம் செய்தல் பற்றிக் கூறும் மத்தேயு நற்செய்திப் பகுதி (மத்.6,1-4) முதலில் வாசிக்கப்பட்டது.

அன்புச் சகோதர, சகோதரிகளே, நாம் இப்பொழுது வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதி, இரக்கத்தின் ஒரு முக்கியக் கூறாகிய தர்மம் செய்தல் பற்றிச் சொல்கிறது. “alms” அதாவது தர்மங்கள் என்ற ஆங்கிலச் சொல், “இரக்கம்” என்று பொருள்படும், பழமையான கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. தர்மம் செய்தல், வெறும் பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல, ஆனால், உண்மையான தேவையில் இருப்போர் மீது, இதயத்தில் அக்கறை உணர்வு பெருக்கெடுத்துக் கொடுப்பதாகும். தர்மம் செய்தலை, கடவுளால் கொடுக்கப்பட்ட கடமை என்று விவிலியம் சொல்கிறது. எனவே இது, சுதந்திரமாகவும், மகிழ்வாகவும், அதேநேரம், பொறுப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும். தர்மம் கேட்கும் பல்வேறு விதங்களிலிருந்து உண்மையான ஏழைகளை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நமது உதவி தேவைப்படும் பிறர் மீது, ஆரவாரமில்லாத மற்றும் உண்மையான அக்கறை காட்டுவதை இயேசுவே ஊக்குவிக்கிறார். ஆயினும், மற்றவரிடமிருந்து பாராட்டைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் செய்யப்படும் பிறரன்புச் செயல்களை இயேசு கண்டிக்கிறார். “பெற்றுக்கொள்வதைவிட, கொடுத்தலே பேறுடைமை”(தி.ப.20:35) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை, இரக்கம் நிறைந்ததாய் இருக்க வேண்டிய முயற்சிகளின்போது நம் இதயத்தில் பதிப்போம்.

இவ்வாறு, தனது சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரையும் வாழ்த்தி, இறைத் தந்தையின் அன்பிரக்கம் அனைவர் மீதும் பொழியப்படச் செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.