2016-04-09 14:06:00

திருஅவையின் கோட்பாடுகள், மக்களுக்குத் தொண்டுபுரிவதற்காகவே


ஏப்.09,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதி, வெளியிட்டுள்ள, “Amoris laetitia” அதாவது, “அன்பின் மகிழ்வு”என்ற திருத்தூது அறிவுரை மடல் குறித்த தங்களின் கருத்துக்களையும், பாராட்டுக்களையும், பல நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திருத்தூது மடல், திருஅவையின் எந்தக் கோட்பாட்டையும் மாற்றாமல், அதேநேரம், இக்கோட்பாடுகள், மக்களுக்குத் தொண்டுபுரிவதற்காக உள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோ பேராயர் Blase Cupich அவர்கள் கூறியுள்ளார்.

“அன்பின் மகிழ்வு”திருத்தூது அறிவுரை மடல், திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனை ஏடு என்றும், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட ஆயர்களில், மூன்றில் இரண்டு பாகத்தினர் ஏற்றுக்கொண்டதற்கு விசுவாசமாக இது அமைந்துள்ளது என்றும் கூறினார் பேராயர் Cupich. இவர், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏப்ரல் 8, இவ்வெள்ளியன்று இம்மடலை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட குழுவில் ஒருவரும், கத்தோலிக்க குடும்பக் கல்வியில் வல்லுனருமான, அருள்பணி José Granados அவர்கள், இம்மடலை, கத்தோலிக்கப் போதனையின் பாரம்பரிய ஒளி கொண்டு நோக்க வேண்டும் என்று கூறினார்.

குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில், 2014ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், 2015ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் ஆகிய இரு கூட்டங்களிலும் கலந்து பேசப்பட்ட கருத்துக்கள், உலகக் கத்தோலிக்கக் குடும்பங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை உள்ளடக்கி, திருத்தந்தையின் இத்திருத்தூது மடல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் அன்பு என்ற மையக் கருத்தைக் கொண்டுள்ள இம்மடல், 264 பக்கங்களையும், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளையும், 325 பத்திகளையும் கொண்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, வியன்னா கர்தினால் Christoph Schönborn உள்ளிட்ட குழு, இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் இம்மடலை வெளியிட்டது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.