2016-04-08 15:16:00

பீஹாரில் மதுபானத்திற்குத் தடை, திருஅவை வரவேற்பு


ஏப்.08,2016. இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, மதுபான உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை, தலத்திருஅவை அதிகாரிகளும், பெண்ணுரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த, பாட்னா பேராயர் வில்லியம் டி சூசா அவர்கள், இந்நடவடிக்கை, ஒரு துணிச்சலான முயற்சி மற்றும் குடும்பங்களுக்கு உண்மையிலேயே ஒரு பெரிய ஆசிர்வாதம் என்று கூறினார்.

மதுபானத்திற்கு முழுவதும் தடை விதித்திருப்பது, சமுதாயத்தில், குற்ற நடவடிக்கைகளையும், விபத்துக்களையும் குறைப்பதோடு, குடும்ப மற்றும் சமூக வாழ்வு, சிறப்பாக அமைவதற்கும் வழி அமைத்துள்ளது என்றும் கூறினார் பேராயர் வில்லியம் டி சூசா.

பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்களின் அரசு கொண்டு வந்துள்ள மதுபானத் தடை, இம்மாதம் 5ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அரசுக்கு, ஆண்டு வருவாயில், ஏறக்குறைய 75 கோடியே 20 இலட்சம் டாலர் இழப்பு ஏற்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், குடும்பங்களில், வறுமை, வன்முறை மற்றும் நச்சரிப்புக்களுக்குக் காரணமாகும் மதுபானங்களுக்கு முழுவதுமாகத் தடை விதித்திருப்பது, அம்மாநிலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.