2016-04-08 15:23:00

நமக்கு அடுத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல


ஏப்.08,2016. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, தங்களின் விசுவாசத்திற்காக நசுக்கப்படுபவர்களுமே என்று, அனைத்துலக கத்தோலிக்க-யூதக் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

இம்மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை, போலந்து நாட்டின் வார்சா நகரில் நடைபெற்ற, 23வது அனைத்துலக கத்தோலிக்க-யூதக் கூட்டமைப்பின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இவ்வுலகில், நமது மிக முக்கிய கவனத்துக்குரியவர்கள் புலம்பெயர்ந்தவர்களே என்று கூறப்பட்டுள்ளது.  

எனினும், ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும், யூத மத விரோதப் போக்கிற்குப் பலியாகும் மக்களும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களும் நமக்கு அடுத்திருப்பவர்கள்தான் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

நோஸ்த்ரா ஏத்தாத்தே (Nostra Aetate) என்ற, கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிக் கூறும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க அறிக்கை வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, இவ்வாண்டில் சிறப்பிக்கப்படும்வேளை, வரலாற்றில் முக்கியமான நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 

ஒரு மதத்தினர் பிற மதத்தவர் மீது கொள்ளும் முற்சார்பு எண்ணங்கள், துன்புறுத்தப்படும் சமயத்தவர், புலம்பெயர்ந்தோர் ஆகிய தலைப்புகள், இவ்வறிக்கையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.