2016-04-08 15:47:00

திருத்தந்தையின் “அன்பின் மகிழ்வு” திருத்தூது அறிவுரை மடல்


ஏப்.08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, “Amoris laetitia” அதாவது, “அன்பின் மகிழ்வு” என்ற திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 8, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில், 2014ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் ஆகிய இரு கூட்டங்களிலும் கலந்து பேசப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி, திருத்தந்தையின் இத்திருத்தூது மடல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் அன்பு என்ற மையக் கருத்தைக் கொண்டுள்ள இம்மடல், 264 பக்கங்களையும், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளையும், 325 பத்திகளையும் உள்ளடக்கியுள்ளது. இம்மடலை, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, வியன்னா கர்தினால் Christoph Schönborn ஆகிய இருவர் உள்ளிட்ட குழு, பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று வெளியிட்டது. குடும்பம் பற்றிய, 2014, 2015ம் ஆண்டுகளின் மாமன்றங்களில் முக்கிய உறுப்பினராக இயங்கியவர் கர்தினால் Schönborn.

“முன்னுரை”(1-7);“இறைவார்த்தையின் ஒளியில்” (8-30); “குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்”(31-57); “குடும்பத்தின் அழைப்பு”(58-88); “திருமணத்தில் அன்பு”(89-164); “அன்பைப் பலனுள்ளதாக ஆக்குதல்”(165-198); “சில மேய்ப்புப்பணி கூறுகள்”(199-258); “குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை நோக்கி”(259-290); “பலவீனமான நேரங்களில் வழிநடத்தி, தேர்ந்து தெளிதல்”(291-312); “திருமணம் மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம்”( 313-325) ஆகிய தலைப்புகளில், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளாக இம்மடல் வழங்கப்பட்டுள்ளது.

உறுதியான குடும்பங்களே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவை என்றும், அன்பு, மதிப்பு மற்றும் பிறரோடு உறவில் வளர்வதற்கு, பிள்ளைகள், இத்தகைய குடும்பங்களிலே கற்றுக்கொள்வார்கள் என்றும் இம்மடல் கூறுகிறது. 

அதேநேரம், குடும்ப வாழ்வில் எதிர்நோக்கப்படும் பல சவால்களுக்குக் காரணம் காட்டுவதையும், திருஅவையின் போதனைகளுக்கு ஏற்ப வாழாதவர்களைக் குறை கூறுவதையும் தவிர்த்து, அவர்கள்மீது அக்கறை காட்டுமாறு, கத்தோலிக்கரை விண்ணப்பித்துள்ளது இம்மடல்.

குடும்பங்கள் பற்றிய தெளிவான புரிதல் அவசியம் என்றுரைக்கும் திருத்தந்தையின் “அன்பின் மகிழ்வு” மடல், தனி நபர்களுக்குத் தேவைப்படும், தனிப்பட்ட மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.