2016-04-08 15:41:00

திருஅவை, குடும்பத்தில் நம்பிக்கை வைத்துள்ளது


ஏப்.08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “அன்பின் மகிழ்வு” திருத்தூது அறிவுரை மடல் பற்றி, இவ்வெள்ளியன்று, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Christoph Schönborn அவர்கள், கடவுள் வகுத்துள்ள திட்டத்திற்கேற்ப அமைந்துள்ள குடும்பத்தில், திருஅவை கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக, இம்மடல் உள்ளது என்று தெரிவித்தார்.

குடும்பத்தின் பிரச்சனைகள் பற்றி முதலில் பேசாமல், அதன் சாதனைகள் பற்றி முதலில் நாம் பேச வேண்டும் என்பதே, இம்மடலின் முக்கிய செய்தியெனத் தான் கருதுவதாகத் தெரிவித்தார் கர்தினால் Schönborn.

ஆபத்துகள், நெருக்கடிகள், பிரச்சனைகள் போன்றவற்றில், எல்லா இடங்களிலும், திருஅவை எச்சரிக்கை கொடுப்பதாகவே நோக்கப்படுகிறது, ஆனால், திருமணத்தையும், குடும்பத்தையும் எண்ணற்ற கொடைகளைக் கொண்டதாக முதலில் பாருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கெஞ்சிக் கேட்டுள்ளார் என்றும் கூறினார் கர்தினால் Schönborn.

முறையான திருமண உறவுகளின்றி வாழ்வோர் அருளடையாளங்களைப் பெறுவதற்கு அனுமதிப்பது குறித்த கருத்துப் பகிர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசியுள்ளார் என்றும் கர்தினால் Christoph Schönborn அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.