2016-04-07 15:38:00

புனிதர்களும், மறைசாட்சிகளும் திருஅவையை வழிநடத்துகின்றனர்


ஏப்ரல்,07,2016. சாதாரண வாழ்வின் புனிதர்களும், இக்கால மறைசாட்சிகளும் திருஅவையை முன்னோக்கி நடத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று கூறினார்.

உயிர்த்த கிறிஸ்துவுக்கு உறுதியுடனும், துணிச்சலுடனும் சான்று பகர்வதன் வழியாக, இதை இவர்கள் ஆற்றுகின்றனர் என்றும், தூய ஆவியாரின் வல்லமையாலே இதனைச் செய்கின்றனர் என்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முடமான மனிதரைக் குணப்படுத்திய பின்னர், யூதத் தலைமைச் சங்கத்தின் முன்னர் தூய பேதுரு துணிச்சலுடன் பேசிய நிகழ்வை விளக்கும் இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.ப.5,27-33) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும் என்று தூய பேதுரு துணிச்சலுடன் கூறியது, அவர், தனது சான்று வாழ்வில் உறுதியாய் இருந்ததைக் காட்டுகின்றது என்று கூறினார்.

தூய ஆவியாரின் உதவியின்றி, நம்மால் சான்று பகர முடியாது என்றும், உண்மையான சான்று வழங்குவதன் வழியாக, கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைச் சரியான பாதையில் அமைக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

தான் சொல்வதிலும், செயல்படுவதிலும், பெற்றுக்கொண்டதிலும் உறுதியாய் இருக்கும் மனிதரே உண்மையான சான்று என்றும், இதுவே கிறிஸ்தவத் துணிச்சல் என்றும்,   இக்கால மறைசாட்சிகளின் சான்று இதுவே என்றும் கூறினார் திருத்தந்தை.

வரலாற்றின் இக்கட்டான நேரங்களில், நாட்டிற்கு, துணிச்சல்மிக்க ஹீரோக்கள் தேவைப்படுகின்றனர் என்று சொல்லப்படுவதை கேள்விப்படுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் திருஅவைக்குச் சான்று பகர்பவர்களும், மறைசாட்சிகளும் தேவை என்று மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.