2016-04-07 15:31:00

திருத்தந்தை, குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு


ஏப்ரல்,07,2016. குரோவேஷிய நாட்டின் பிரதமர் Tihomir Oreskovic அவர்களை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து, பரிசுப் பொருளையும் அளித்தார் குரோவேஷிய பிரதமர் Oreskovic. திருத்தந்தையும், “Laudato si'”, "Evangelii gaudium" ஆகிய தனது இரு திருத்தூது மடல்களையும் பிரதமருக்கு அளித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையே உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்தார் பிரதமர் Oreskovic.

திருப்பீடத்திற்கும், குரோவேஷிய நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், குரோவேஷியாவில் வாழும் போஸ்னிய-எர்செகொவின சிறுபான்மை மக்களின் நிலைமை, அருளாளர் Alojzije Stepinac அவர்கள் மீது குரோவேஷிய மக்கள் கொண்டுள்ள பக்தி(1937ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டுவரை Zagreb பேராயராகப் பணியாற்றிய அருளாளர் Alojzije Stepinac அவர்கள், கம்யூனிச அரசால் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர் மற்றும் 1998ம் ஆண்டில் இவரை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்) போன்றவை பற்றி, இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து புலம்பெயரும் மக்களின் நிலைமை, உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் போர்கள், குடிமக்கள் சமுதாயத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகள் போன்ற பன்னாட்டு விவகாரங்கள் குறித்தும் இத்தலைவர்கள் கலந்துரையாடினர் என்றும் கூறியது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.