2016-04-07 15:18:00

கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கடவுளன்புக்குச் சான்று பகரவேண்டும்


ஏப்.07,2016. அதிகத் தீமையால் துன்பத்திற்குள்ளாகியுள்ள இன்றைய உலகில், கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஒளியில், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து, கடவுளன்புக்குச் சான்று பகர வேண்டியது, எக்காலத்தையும்விட இக்காலத்தில், மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலக மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபையின் ஆலோசனைக் குழுவினரை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அச்சபையினர், உரோமையில் தொடங்கியுள்ள, மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கத்தோலிக்கரும், மெத்தடிஸ்ட் சபையினரும் ஒருவரையொருவர் சந்திக்கவும், ஒருவர் ஒருவரின் விசுவாசத்தைப் பாராட்டி அதில் வளர்வதற்கும், இந்த அலுவலகம் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு சபையினரும் உரையாடலைத் தொடங்கி ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இச்சபையினர் இணைந்து தயாரித்துவரும், “தூய வாழ்வுக்கான அழைப்பு” என்ற தலைப்பிலான ஏடு பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தூய வாழ்வைப் புரிந்துகொண்டு வாழ்வது எப்படி என்பதை, கத்தோலிக்கரும், மெத்தடிஸ்ட் சபையினரும், ஒருவர் மற்றவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, எல்லாவற்றிலும் நாம் ஒரே மாதிரி சிந்திக்காவிட்டாலும், நாம் ஒரே மாதிரி அன்பு கூரலாம் என்று, John Wesley அவர்கள் உரோமன் கத்தோலிக்கருக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருக்கின்றதையும் குறிப்பிட்டார்.  

மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகம், இப்புதனன்று உரோம் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.