2016-04-07 15:45:00

ஏப்ரல் 16, லெஸ்போஸ் தீவுக்கு திருத்தந்தையின் பயணம்


ஏப்.07,2016. புலம்பெயர்ந்தோர் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ள கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் (Lesbos) தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 16, சனிக்கிழமையன்று செல்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவுக்குச் செல்லவிருப்பது குறித்து, இவ்வியாழனன்று அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் Prokopis Pavlopoulos ஆகிய இருவரின் அழைப்பின்பேரில் செல்கிறார் என்று அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus ஆகிய மூவரும், இம்மாதம் 16, சனிக்கிழமையன்று, லெஸ்போஸ் தீவிலுள்ள, புலம்பெயர்ந்த மக்களைச் சந்திப்பார்கள் என்றும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

லெஸ்போஸ் தீவில் துன்புறும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தும் நோக்கத்தில், இக்கிறிஸ்தவத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

லெஸ்போஸ் தீவு, துருக்கி நாட்டுக் கடற்பரப்பில் அமைந்துள்ள கிரேக்க நாட்டுத் தீவாகும். அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், துருக்கி நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, கிரேக்க நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தவர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட வேண்டும்.  

98 விழுக்காட்டு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கிரேக்க நாட்டின் ஏத்தென்ஸ் நகருக்கு, 2001ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை சென்றது அதுவே முதன்முறையாக அமைந்தது. அடுத்து, 2016ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் செல்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.