2016-04-06 15:15:00

லெஸ்போஸ் தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் செல்லக்கூடும்


ஏப்ரல்,06,2016. புலம்பெயந்தோர் ஆயிரக்ககணக்கில் வந்து சேர்ந்துள்ள கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் (Lesbos) தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அழைத்திருப்பதாக, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

கிரேக்க நாட்டை அடைந்துள்ள மக்களின் அவல நிலையை உலக அரசுகளின், குறிப்பாக, ஐரோப்பிய அரசுகளின் கவனத்திற்குக் கொணரும் முயற்சியாக, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து, திருத்தந்தையும் ஆர்வம் காட்டினார் என்று இத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அழைப்பைக் குறித்து, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அழைப்புக்கள் வந்துள்ளன என்றும், இந்தப் பயணம் குறித்த திட்டவட்டமான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் பதிலளித்தார்.

இதற்கிடையே, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், லெஸ்போஸ் தீவுக்கு தான் செல்லவிருப்பதாக கூறியிருப்பதை, முதுபெரும் தந்தையின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.