2016-04-06 14:46:00

திருத்தந்தையின் ஏப்ரல் மாத செபக் கருத்து, காணொளிச் செய்தி


ஏப்ரல்,06,2016. "சிறு விவசாயப் பெருமக்களே, உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நீங்கள் செய்யும் பணிகள், வாழ்வுக்கு அடித்தளம். ஒரு மனிதர் என்ற முறையில், இறைவனின் குழந்தை என்ற முறையில், நல்லதொரு வாழ்க்கைக்கு உரியவர்கள் நீங்கள். ஆயினும், நீங்கள் ஆற்றும் பணிக்கு ஏற்ற பலன் உங்களுக்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகமே" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் காணொளிச் செய்தியொன்று, இச்செவ்வாய் மாலை வெளியானது.

இயேசு சபையினரால் நடத்தப்படும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக, திருத்தந்தையின் ஒவ்வொரு மாத செபக் கருத்துக்களை, காணொளிச் செய்தியாக வெளியிட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செபக்கருத்து, சிறிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மையப்படுத்தி அமைந்துள்ளது.

சிறு விவசாயிகளின் கடின உழைப்பைப் பாராட்டும் திருத்தந்தை, பெரும் செல்வம் மிக்க நிறுவனங்களால் இவர்களது உழைப்பு தகுதியான வகையில் பலன் அடையாமல் போவதையும் குறித்து இந்தக் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இவ்வுலகம் இறைவனிடமிருந்து நாம் பெற்றுள்ள கோடை என்றும், இந்தக் கொடையை ஒரு சிலரின் ஆதாயத்திற்கென தவறாகப் பயன்படுத்துவது நீதியல்ல என்றும் திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறு விவசாயிகள் செய்யும் உன்னதத் தொழிலுக்கு ஏற்ற பலன்களைப் பெறுவதற்கு அனைவரும் என்னுடன் இணைந்து செபியுங்கள் என்ற விண்ணப்பத்துடன், இந்தக் காணொளிச் செய்தியை, திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.

ஆப்ரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்கள், அங்கு நிலவும் அரசியல்-மத மோதல்களின் நடுவே, இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் சான்று பகர்வதற்கு செபிப்போம் என்பது, ஏப்ரல் மாதத்திற்கு, திருத்தந்தை வெளியிட்டுள்ள நற்செய்திபரப்புப்பணி கருத்தாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.