2016-04-06 15:08:00

சுவிஸ் காவல் வீரர்களின் பணிகளை மையப்படுத்திய கண்காட்சி


ஏப்ரல்,06,2016. வத்திக்கானில் பணியாற்றும் சுவிஸ் காவல் வீரர்களின் பணிகளை மையப்படுத்திய ஒரு கண்காட்சி, அண்மையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தில் துவங்கியுள்ளது.

ஜூன் 11ம் தேதி முடிய நீடிக்கும் இந்தக் கண்காட்சியில், சுவிஸ் காவல் வீரர்களை மையப்படுத்தி, Fabio Mantegna என்பவர் எடுத்துள்ள 86 புகைப்படங்கள், மற்றும், வரலாற்றில் இந்த வீரர்கள் பயன்படுத்திய சீருடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வத்திக்கானுக்கு  வருகை தரும் பயணிகள் அனைவரையும் கவரும் சுவிஸ் வீரர்களைக் குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இந்த இளையோருக்கு திருப்பீடம் வழங்கும் மரியாதை என்று, வத்திக்கான்  அருங்காட்சியக இயக்குனர், Antonio Paolucci அவர்கள் கூறினார்.

20 முதல் 23 வயது வரை வத்திக்கானில் பணியாற்ற வரும் இவ்விளையோர், ஈராண்டு பணிக்குப் பின்னர் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர் என்றும், இவர்களில் பலர், இறையழைத்தல் பெற்று, அருள் பணியாளர்களாக, துறவியராக தங்கள் வாழ்வைத் தொடர்கின்றனர் என்றும், சுவிஸ் வீரர்களின் தளபதி, Christoph Graf அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.