2016-04-05 14:52:00

நல்லிணக்கத்தோடு வாழ்வது தூய ஆவியாரின் கொடை


ஏப்ரல்,05,2016. ஒரு கிறிஸ்தவ சமூகம், நல்லிணக்கத்தோடு வாழ்கின்றதென்றால், அது தூய ஆவியார் அருளும் கொடையால்தான் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் பணிகளிலிருந்து எடுக்கப்பட்ட, இந்நாளையத் திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.தூ.4:32-37) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் கிறிஸ்தவ சமூகத்தின் உணர்வுகளையும், வாழ்க்கைத் தரத்தையும், நல்லிணக்கம் என்ற ஒரே வார்த்தையில் அடக்கி விடலாம் என்று கூறினார். 

முதல் கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்வு, அனைவரின் நன்மைக்காக, விழுமியங்களையும், செல்வத்தையும் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் அமைந்த, ஒன்றித்த வாழ்வு என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவில் ஒன்றித்துள்ள ஒரு சமூகம், துணிச்சல் கொண்ட சமூகம் என்றும் கூறினார். 

நாம் ஒருவகையான அமைதி பற்றி நாம் பேசலாம், ஆனால், நல்லிணக்கம் என்பது உள்ளத்தில் பொழியப்படும் அருளாகும், இது தூய ஆவியாரால் மட்டுமே அருளப்படும் என்றும், திருஅவையின் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்த நல்லிணக்கம், தூய ஆவியாரின் கொடையாகும் என்றும், இது மனிதரால் ஆனது அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தேவையில் இருப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள், எல்லாமே பகிர்ந்து கொள்ளப்படும், இவையிரண்டும் நல்லிணக்கத்தின் இரு அடையாளங்கள் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, இறைவனும், பணமும் ஒத்திணங்க முடியாத இரு தலைவர்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.