2016-04-05 15:43:00

உலகில் இராணுவத்திற்கான செலவு அதிகரிப்பு


ஏப்ரல்,05,2016. உலகில் இராணுவத்திற்கெனச் செலவிடப்படும் தொகை, சில ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் கடந்த 2015ம் ஆண்டில் அதிகரித்திருப்பது, உலக அமைதிக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது என்று ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது.

சுவீடன் நாட்டின், SIPRI என்ற Stockholm பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2015ம் ஆண்டு முழுவதும் இராணுவத்திற்கெனச் செலவிடப்பட்ட தொகை, ஏறக்குறைய 1,700 பில்லியன் டாலர் என்றும், இது, 2014ம் ஆண்டைவிட ஒரு விழுக்காடு அதிகம் என்றும் கூறியுள்ளது.

உலகில் இராணுவத்திற்கென அதிகமாகச் செலவிடும் நாடுகளில், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, சவுதி அரேபியா, இரஷ்யா என்ற வரிசையில், ஜப்பான் எட்டாவது இடத்தில் உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம், ஏமனில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைத் தாக்குதல், சவுதி அரேபியாவில் ஈரானின் அச்சுறுத்தல்கள், தென் சீனக் கடலில், சீன இராணுவப் படையின் விரிவாக்கம், கிரிமியா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் இரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகள், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான வான்வெளித் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பல நாடுகள் தங்களின் இராணுவ பலத்தை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாடு, 596 பில்லியன் டாலர்களையும், சீனா 215 பில்லியன் டாலர்களையும், சவுதி அரேபியா, 87.2 பில்லியன் டாலர்களையும், ஈராக் 13.1 பில்லியன் டாலர்களையும் இராணுவத்திற்காகச் செலவிடுகின்றன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Agencies /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.