2016-04-04 17:25:00

யூபிலி ஆண்டின் அடையாளமாக பிறரன்பு நிறுவனங்கள்


ஏப்ரல்,04,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அடையாளமாக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பிறரன்பு நிறுவனங்கள் அமைந்தால், எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய சனிக்கிழமை மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெற்ற திருவிழிப்பு திருவழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையை வழங்கி, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தபின், இறுதியாக இந்த ஆவலை வெளியிட்டார்.

மருத்துவமனை, முதியவர் இல்லம், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு காப்பகம், கல்வி வசதியற்ற இடங்களில் பள்ளிகள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்போருக்கு மறுவாழ்வு மையம் என்று, இரக்கத்தின் ஆண்டில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், ஒரு முயற்சி துவங்கப்பட்டால், அது, திருஅவையின் தெளிவான அடையாளமாக அமையும் என்று, திருத்தந்தை, தன் மனதிலிருந்து எழுந்த எண்ணங்களை, மக்களுடன் நேரடியாகப் பகிர்ந்துகொண்டார்.

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் ஆயர்களிடம் இதுகுறித்து பேசவேண்டும் என்றும், அவ்வகையில் கிறிஸ்துவின் காயங்களை ஆற்றும் வழிகள் பிறக்கும் என்றும் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.