2016-04-04 17:12:00

நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு நாளையொட்டி ஐ.நா. செய்தி


ஏப்ரல்,04,2016. மோதல்கள் நிறைந்த நாடுகளிலும், மோதல்கள் முடிந்துவிட்ட நாடுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் என்ற ஆபத்து தொடர்கிறது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், மோதல்கள் புதிதாக எழுந்துள்ள நாடுகளிலும் கண்ணிவெடிகளின் ஆபத்து வளர்ந்துவருவது மிகுந்த வேதனையைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.

தன் செய்தியில், தெற்கு சூடானை ஓர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், அங்கு கடந்த 12 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட அயராத முயற்சியால், 1 கோடியே 40 இலட்சம் சதுர மீட்டர்கள் நிலப்பரப்பு மற்றும் 3000 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை ஆகியவற்றிலிருந்து 30,000த்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

தற்போது சிரியாவில் கண்ணிவெடிகளால் உறுப்புக்களை இழந்த 5,400க்கும் அதிகமான மக்கள் மறுவாழ்வு பாடங்களைப் பயின்று வருகின்றனர் என்றும், 20 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கண்ணிவெடிகள் குறித்த எச்சரிக்கை பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு முதல், இந்த உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது என்பதும், "வெடிகளை அகற்றும் செயல், மனிதாபிமானச் செயல்" என்பது இவ்வாண்டின் மையக்கருத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் :  UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.