2016-04-04 16:03:00

திருத்தந்தை: நற்செய்தியை நம் வாழ்வில் தொடர்ந்து எழுதுவோம்


ஏப்ரல்,04,2016. நற்செய்தியை மீண்டும், மீண்டும் நம் வாழ்வின் வழியே தொடர்ந்து எழுதுவதற்கும், அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதர்களாக இருப்பதற்கும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 3, இஞ்ஞாயிறு காலை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இறை இரக்க ஞாயிறு திருப்பலியை முன்னின்று நடத்தியத் திருத்தந்தை, நற்செய்தி, தந்தையாம் இறைவனின் இரக்கத்தைக் கூறும் நற்செய்தி, ஏனெனில், கிறிஸ்து, இறைவனின் இரக்கத்திற்கு கண்கூடான வெளிப்பாடாக விளங்கினார் என்று தன் மறையுரையில் கூறினார்.

உடல் அளவிலும், ஆன்மீக அளவிலும் நாம் இரக்கத்தின் செயல்களில் ஈடுபடும் வேளையில் நாம் வாழும் நற்செய்திகளாக மாறுகிறோம் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.

மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் வாழ்ந்துவந்த சீடர்களைப் போல், நாமும், பாவத்தால் மூடப்பட்ட மனங்களுடன் வாழும்போது, அங்கு, உயிர்ப்பின் மகிழ்வு நுழைவதற்கு தடையாக இருக்கும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நம் பாவங்களால் உருவான காயங்களையும், உலகில், அநீதி, வறுமை ஆகிய கொடுமைகளால் உருவாகியுள்ள காயங்களையும் குணமாக்க, இறைவனின் இரக்கம் நம்மைத் தேடி வருகிறது என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

தந்தையாம் இறைவனின் இரக்கம் என்ற ஆழ்கிணற்றிலிருந்து தண்ணீரைக் கொணர்வதற்கும், அதை, உலகில் பகிர்வதற்கும் நாம் களைப்பின்றி உழைப்பதற்கு வேண்டிய அருளை வேண்டுவோம் என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.

திருத்தூதரும் நற்செய்தியாளருமான யோவான், எழுதாமல் விட்டுச்சென்ற நற்செய்தி பக்கங்களை நம் வாழ்வின் வழியே எழுதுவோமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.