2016-04-04 17:19:00

இறை இரக்க ஞாயிறு திருவிழிப்பு வழிபாட்டில் மறையுரை


ஏப்ரல்,04,2016. இரக்கம் காட்டுவதில் இறைவன் ஒருபோதும் சலிப்படைவதே இல்லை; அந்த இரக்கத்தை, தேடி, கண்டடையும் வாய்ப்புக்களை, நாம் ஆர்வமற்ற முறையில் அணுகிச் செல்லக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய சனிக்கிழமை மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

2005ம் ஆண்டு, இதே ஏப்ரல் 2ம் தேதி, சனிக்கிழமையாக, இறை இரக்க ஞாயிறு திருவிழிப்பு நாளாக அமைந்தது என்பதையும், அந்த நாள் இரவு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் இறையடி சேர்ந்தார் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

“பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்” (ஓசேயா 11:4) என்று இறைவாக்கினர் ஓசேயா கூறும் வார்த்தைகள், தங்கள் குழந்தையை கனிவோடு அரவணைத்து, கன்னத்தோடு, கன்னம் வைத்துக்கொள்ளும் பெற்றோர் என்ற ஓர் காட்சியை நம் மனக்கண் முன் கொணர்கின்றன என்று குறிப்பிட்டார், திருத்தந்தை.

கனிவு என்பது இவ்வுலகில் மறக்கப்பட்டு வரும் ஒரு பண்பு என்று கூறியத் திருத்தந்தை, குழந்தையும், பெற்றோரும் முகத்தோடு முகம் இணைந்திருக்கும் இந்தக் காட்சி, இரக்கத்தின் யூபிலிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலச்சினையை நினைவுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டினார்.

இறைவனின் முகத்தையும், ஆதாமின் முகத்தையும் தன் முகத்தோடு இணைத்துக் கொண்டவர் இயேசு என்று தன் உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, அந்த இயேசுவின் வழியாகவே இவ்வுலகம் இறைவனின் அன்பை நடைமுறை வாழ்வில் உணர முடிந்தது என்று எடுத்துரைத்தார்.

இரக்கம் என்பது, ஒருவரை, தன்னிலேயே திருப்தி அடைய விடுவதில்லை; மாறாக, அடுத்தவரைத் தேடிச்சென்று, அவரை வரவேற்று, அணைப்பதில், இரக்கம் திருப்தி கொள்கிறது என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.