2016-04-04 17:32:00

அருள்பணி உழுன்னலில் பாதுகாப்பாக இருக்கிறார் - இந்திய அரசு


ஏப்ரல்,04,2016. ஏமன் நாட்டில், தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்கள், பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், அவரது விடுதலைக்காக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றும், இந்திய ஆயர் பேரவையின் இணைச் செயலர், அருள்பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள் தெரிவித்ததாக UCAN செய்தி கூறியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் அவர்களை, சனிக்கிழமை மாலை தான் சந்தித்ததாகவும், அருள்பணி தாமஸ் அவர்களின் விடுதலை விரைவில் நிகழும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அருள்பணி சின்னய்யன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடத்திச் சென்ற கும்பலுடன், இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளின் விவரங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட மறுத்துவிட்டார் என்று கூறிய அருள்பணி சின்னய்யன் அவர்கள், இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

ஏமன் நாட்டில் நடைபெற்ற தீவிரவாதத்  தாக்குதலிலிருந்து தப்பித்த அருள் சகோதரி ரேமா அவர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்கும் இந்திய அரசு முயற்சிகள் எடுத்துவருவதாக அமைச்சர் சுவராஜ் அவர்கள் கூறியுள்ளதையும், அருள்பணி சின்னய்யன் அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.