2016-04-02 15:21:00

உலகளாவியத் திருஅவையின் கரங்கள் விரிந்திருக்க வேண்டும்


ஏப்.02,2016. திறந்த பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு புதிய ஆன்மீகத்தை, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை வளர்க்க வேண்டும் என்று, ஜெர்மன் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வத்திக்கானில் நடைபெற்றுவரும் இரக்கத்தின் திருத்தூது ஐரோப்பிய மாநாட்டில்,  இவ்வெள்ளியன்று உரையாற்றிய கர்தினால் காஸ்பர் அவர்கள், நம்முடன் வாழும் சகோதர, சகோதரிகளில் இறைவனின் பிரசன்னம் அதிகமதிகமாக இருப்பதை ஏற்பதற்கு, திறந்த பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு புதிய ஆன்மீகம் அவசியம் என்று கூறினார்.

இவ்வளவு துன்பங்களும், அநீதிகளும், எதிர்மறைச் சாட்சியங்களும் நிலவும் இன்றைய உலகில், இறைவன் அல்லது இறைவனின் இரக்கம் பற்றி நாம் எவ்வாறு பேசுவது  என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர் என்றுரைத்த கர்தினால் காஸ்பர் அவர்கள், இக்கேள்விக்கு இயேசுவின் வார்த்தைகளே பதிலாக அமைகின்றன என்று கூறினார்.

ஏழைகள், நோயுற்றோர், புலம்பெயர்ந்தவர் மற்றும் தேவையில் இருக்கும் அனைத்துச் சகோதர, சகோதரிகளில் தம்மைக் காண முடியும் என்று இயேசு கூறுகிறார் என்றும் உரைத்தார் கர்தினால் காஸ்பர்.

மார்ச் 31, கடந்த வியாழனன்று தொடங்கிய இரக்கத்தின் திருத்தூது ஐரோப்பிய மாநாடு,  ஏப்ரல் 4, வருகிற திங்களன்று நிறைவடையும்.

WACOM என்றழைக்கப்படும் (World Apostolic Congress on Mercy) உலக இரக்கத்தின் திருத்தூது மாநாடு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. இதன் முதல் உலக மாநாடு 2008ம் ஆண்டு, உரோம் நகரில் நடைபெற்றது. அடுத்து, 2017ம் ஆண்டில் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், இரக்கத்தால் அழைக்கப்பட்டு, இரக்கத்தால் அனுப்பப்படுதல்' என்ற மையக்கருத்துடன் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.