2016-04-02 14:58:00

ஈராக் கிறிஸ்தவர்களுக்கு, நிதியுதவி, திருவழிபாட்டு உடைகள்


ஏப்.02,2016. ஈராக் கிறிஸ்தவர்களுடன் தனது பாசத்தையும், தோழமையுணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக, திருவழிபாடுகளில் பயன்படுத்தப்படும் உடைகளையும், நிதியுதவியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

கார்ப்பி ஆயர் பிரான்செஸ்கோ கவினா (Francesco Cavina of Carpi) அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், எர்பில் நகரில் வாழும் கிறிஸ்தவப் புலம்பெயர்ந்த மக்களுக்கு, Aid to the Church in Need(ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் வழியாக, இவற்றைத் தான் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

துன்புறும் இந்த உடன் பிறப்புக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் மனம் மற்றும் உடல் அளவிலான காயங்களைக் குணப்படுத்தவும், நொறுங்குண்ட மற்றும் சிலவேளைகளில் நம்பிக்கையிழந்த இவர்களைத் தேற்றவும், இரக்கம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று, திருத்தந்தை அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தந்தையின் இக்கடிதம் குறித்துக் கூறிய ஆயர் கவினா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எர்பிலுக்குச் செல்லும் பிரதிநிதி குழு பற்றிக் கேள்விப்படவுடனேயே, ஈராக் கிறிஸ்தவர்களுக்கு நன்கொடைகள் அனுப்புவது குறித்த தனது ஆவலைத் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

ஈராக்கின் குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நகருக்கு, Aid to the Church in Need அமைப்போடு சேர்ந்து, ஏப்ரல் 1, இவ்வெள்ளியன்று நான்கு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஒரு பிரதிநிதி குழுவில் ஆயர் கவினா அவர்களும் ஒருவர்.

ஈராக்கில் புலம்பெயர்ந்துள்ள மற்றும் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கிறிஸ்தவர்களுக்கென, 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு கோடியே 51 இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளது ACN கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.