2016-04-02 14:51:00

இறை இரக்கத்தின் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


மனித வாழ்வை ஆட்டிப்படைக்கும் மனநோய்களிலேயே அதிக ஆபத்தானது... சந்தேகம். சந்தேகம் ஒரு கூட்டு உணர்வு; பல உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில், கூடவே, பயம், கோபம், வருத்தம், நம்பிக்கையின்மை என்ற பல உணர்வுகள், கூட்டுக்குடித்தனம் செய்யும். சந்தேகத்தைத் தீர்க்கக்கூடிய சக்திவாய்ந்த மருந்து, இரக்கம்.

சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை 'இறை இரக்கத்தின்' ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் பல சூழல்களில், பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, அமைதியை உருவாக்கும் நேரத்தில், இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். சந்தேகத்திலும் குழப்பத்திலும் தவித்த சீடர்களைத் தேடி, குறிப்பாக, தோமாவைத் தேடிச் சென்று, அவருக்கு உறுதி வழங்கிய இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர், தோமா. உண்மை பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல், சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம், தோமா, சந்தேகத்தின் மறுபிறவியாக மாறிவிட்டார்.

தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்படமுடிந்தது?" என்ற கேள்வியை எழுப்பி, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு." என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறுவது எளிது.

கல்வாரியில் இயேசு இறந்ததை நாம் நேரில் பார்த்திருந்தால், தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் சீடர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன. அவர்கள் வாழ்வில் இயேசு விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகம், பயம், உரோமையர்கள் மற்றும் யூதமதத் தலைவர்கள் மீது வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் நிரப்பிவிட்டன. தங்களில் ஒருவரே இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்துபோனது. சிலுவையில் ஒரு கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர், சீடர்கள்.

கடந்த சில வாரங்களாக, நம்முடைய நிலையும் சீடர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. நாம் அண்மையில் கேட்ட துயரமான நிகழ்வுகள், நம்மை, குழப்பத்திலும், சந்தேகத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளதை உணரலாம். மார்ச் மாத துவக்கத்தில் (மார்ச் 4), ஏமன் நாட்டில், நான்கு அருள் சகோதரிகளும், 10 நலப்பணியாளர்களும் அரக்கத்தனமாகக் கொல்லப்பட்டனர். ஓர் அருள்பணியாளர் கடத்திச் செல்லப்பட்டார். புனிதவாரம் துவங்கியதும், மார்ச், 22, செவ்வாய்கிழமை, பிரஸ்ஸல்ஸ் நகரில், தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. ஏமன் நாட்டில் கடத்தப்பட்ட அருள்பணியாளர், புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்படுவார் என்றும், அறையப்பட்டுவிட்டார் என்றும் உலவி வந்த வதந்திகள், நம்மை மேலும் துயரத்தில் ஆழ்த்தின. கடந்த ஞாயிறன்று, உலகெங்கும் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடப்பட்ட போது, பாகிஸ்தானில், லாகூர் நகர் பூங்காவில், கல்வாரிக் கொடுமைகள் மீண்டும் நிகழ்ந்தன. இத்தகையக் கொடுமைகளை எவ்விதம் புரிந்துகொள்வது? இவற்றிற்கு எவ்விதம் பதிலிறுப்பது?

அர்த்தம் எதுவுமே இல்லாமல், வன்முறைகள் நிகழும்போது, நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தரப்படும் வழிகள், மன்னிப்பு, மற்றும் செபம். இவ்விரண்டையும் இணைத்து, இயேசு கல்வாரியில் சொன்ன வார்த்தைகள், அடிக்கடி நமக்கு நினைவுறுத்தப்படுகின்றன. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34) இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும்போது, தான் சந்தித்தக் கொடுமைகளுக்கு, மன்னிப்பையும், செபத்தையும் முன்னிலைப்படுத்திய இயேசுவின் வார்த்தைகளை, இந்த ஞாயிறு வழிபாட்டின்போது புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இருவேறு மடல்கள் உதவியாக இருக்கும். முதல் மடல், அண்மையில், சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மடல். 2015ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, பாரிஸ் மாநகரிலும், புறநகர்ப் பகுதியிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தன் இளம் மனைவியை இழந்த ஒருவர், தீவிரவாதிகளுக்கு எழுதியுள்ள திறந்த மடல் இது:

"வெள்ளிக்கிழமை மாலை, ஓர் அற்புத உயிரை நீங்கள் திருடிக் கொண்டீர்கள். அவர்தான் என் அன்பு மனைவி, என் மகனின் தாய். ஆனாலும், என் வெறுப்பை உங்களால் பெற முடியாது. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை; நீங்கள் எல்லாருமே இறந்த ஆன்மாக்கள்.

கடவுளுக்காகக் கண்மூடித்தனமாக நீங்கள் கொல்கிறீர்களே; அந்தக் கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றால், என் மனைவியின் உடலைத்  துளைத்த உங்கள் ஒவ்வொரு குண்டும், அந்தக் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருக்கும்.

முடியாது. என் வெறுப்பைப் பெறும் திருப்தியை உங்களுக்கு நான் தரமுடியாது. அதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்! வெறுப்புக்கு, கோபத்தால் நான் விடையளித்தால், உங்களை ஆட்டிப் படைக்கும் அறியாமைக்கு நானும் அடிமையாகிவிடுவேன்.

நான் பயத்தில் வாழவேண்டும், எனக்கு அருகிலிருப்போர் அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்காது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என் பாதுகாப்பிற்காக, என் உள்மனச் சுதந்திரத்தை, பலிகொடுக்க மாட்டேன்.

இப்போது இருப்பது, நாங்கள் இருவர் மட்டுமே, நானும், என் மகனும். ஆனால், உலகின் இராணுவங்களை விட, நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள். என் செல்ல மகன், வாழப்போகும் ஒவ்வோரு நாளும், தன் மகிழ்வாலும், சுதந்திரத்தாலும் உங்களை அவன் அவமானப் படுத்திக்கொண்டே இருப்பான்."

Helene Muyal என்ற தன் இளம் மனைவியை இழந்த, Antoine Leiris என்ற பத்திரிகையாளர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மடல் இது.

தெளிவான, துணிவான, உணர்வுகளை வெளியிடும் இம்மடல், வெறுப்புக்குப் பணியமாட்டேன் என்ற உன்னத உண்மையைச் சொல்கிறது. அதேவேளை, பரிவு, இரக்கம் என்ற உண்மைகளுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லாமல் எழுதப்பட்ட மடலோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது. தீவிரவாதிகளின் வெறுப்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை, இம்மடல் நேருக்கு நேர் சந்திக்காமல் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய மடலை வாசிக்கும் வன்முறையாளர்களின் வெறுப்பு இன்னும் கூடும் என்று அஞ்சத் தோன்றுகிறது.

இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு மடல் ஒரு துறவியால் எழுதப்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Christian de Chergé என்ற ஒரு துறவி, தன் மரணத்திற்கு முன் எழுதிய ஒரு மடலைச் சிந்தித்துப் பார்க்கலாம். Cistercian துறவுச் சபையைச் சேர்ந்த Christian அவர்கள், அல்ஜீரியா நாட்டில் பணியாற்றியபோது, இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டார். அல்ஜீரியாவில் பணியாற்றுவதற்கென, இவர், இஸ்லாமிய மதத்தையும், குர்ஆனையும் ஆழமாகப் படித்துத் தேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தபோது, அருள்பணி Christian அவர்கள், எழுதிய ஒரு மடல், உலகில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றிற்கு நம் பதிலிறுப்பு எவ்விதம் அமையவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதோ, அருள்பணி Christian அவர்கள், எழுதிச் சென்ற இறுதி சாசனம்:

"எந்நேரமும் எனக்கு மரணம் வரலாம் - இன்று, இப்போது அது வரலாம். தீவிரவாதத்தின் பலிகடாவாக நான் மாறும்போது, என் துறவுக் குடும்பம், என் உறவினர் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாழ்வு, இறைவனுக்கும், இந்நாட்டுக்கும் முற்றிலும் வழங்கப்பட்டது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போலவே, கொடூரமான மரணங்களைச் சந்தித்து, மறக்கப்பட்ட பலரை நினைவில் கொள்ளுங்கள்.

என் மரணம் நெருங்கிவரும் வேளையில், என்னை மன்னிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவேண்டும். அதேவண்ணம், என்னைக் கொல்பவர்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். என் கொலைக்குக் காரணம் இவர்களே என்று, தாறுமாறாக, இவர்கள்மீது குற்றம் சாட்டப்படுவது, என்னை மகிழ்விக்காது. பொதுப்படையாக எழும் இவ்விதக் குற்றச்சாட்டுகளால், அல்ஜீரிய மக்களையும், இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு, மரியாதையின்றி பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.

இறைவன் விரும்பினால், என் இறுதி நேரத்தில் நான் செய்ய விழைவது இதுதான். தந்தையாம் இறைவன், இஸ்லாமியர் அனைவரையும், தன் அன்புக் குழந்தைகளாகப் பார்ப்பதுபோல், நானும் அவர்களைப் பார்க்கும் வரம் வேண்டுகிறேன். என் இறுதி நேரத்தை நிர்ணயிக்கும் அந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இறைவனின் சாயலை உம்மில் காண்கிறேன். இறைவனுக்கு விருப்பமானால், நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சிந்திப்போம். ஆமென்.

அருள்பணி Christian அவர்கள் எழுதியுள்ள இம்மடல், காயங்களைத் திறப்பதற்குப் பதில், அந்தக் காயங்களிலேயே மீட்பைக் காண்பதற்கு அழைப்பு விடுக்கிறது. இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது. கல்வாரியில் காயப்பட்டது போதாதென்று, சீடர்களின் சந்தேகத்தாலும், நம்பிக்கையிழந்த நிலையாலும் இயேசு மீண்டும் காயப்படுகிறார். இருப்பினும், அந்தக் காயங்களைத் தொடுவதற்கு தன் சீடர்களையும், நம்மையும் அழைக்கிறார். காயங்களைத் தொடுவது, மீண்டும் வலியை உருவாக்கலாம். ஆனால், அன்புடன், நம்பிக்கையுடன் தொடும்போது, காயங்கள் குணமாவதற்கும் வழி பிறக்கும். இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது.

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா, இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)

இயேசுவை கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு இவ்விதம் ஆழமாய்த் தொட்டதால், தான் அடைந்த மீட்பை, அந்த மீட்புக்கு தன்னை அழைத்துச்சென்ற இயேசு கிறிஸ்துவை, உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவில் அறிமுகம் செய்தவர், திருத்தூதர், தோமா.

இறைவனின் இரக்கம் சந்தேகப் புயல்களை அடக்கும்;  சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.