2016-04-01 15:03:00

குடும்பங்களுக்காக திருத்தந்தை வெளியிடும் அறிவுரை மடல்


ஏப்ரல்,01,2016. உலக ஆயர்கள் மாமன்றத்திற்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 8, வருகிற வெள்ளியன்று வெளியிடப்படும் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

குடும்பங்களை மையப்படுத்தி, 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றம், மற்றும், 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆயர்கள் உலக மாமன்றம் ஆகிய இரு கூட்டங்களிலும் கலந்து பேசப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி, திருத்தந்தை வெளியிடவிருக்கும் அறிவுரை மடல், ஊடகங்களில் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

இன்றைய உலகில் குடும்பங்கள் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி, ஆயர்களின் மாமன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த அறிவுரை மடல், Amoris Laetitia, அதாவது, அன்பின் மகிழ்வு என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர், கர்தினால் Lorenzo Baldisseri, வியன்னா கர்தினால், Christoph Schönborn, ஒரு குடும்பத் தலைவர், பேராசிரியர், Francesco Miano, மற்றும் ஒரு குடும்பத் தலைவி, பேராசிரியர், Giuseppina De Simone ஆகியோர் இந்த மடலை வெளியிடும் குழுவினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு விழா, இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்றும், இந்த வெளியீட்டு விழா, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், வத்திக்கான் செய்தித் தொடர்பாளர், அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.