2016-04-01 15:10:00

அரிய வகை நோயால் துன்புறும் சிறுவனைச் சந்தித்த திருத்தந்தை


ஏப்ரல்,01,2016. மிக அரிய வகை நோயால் துன்புறும் இஞ்ஞாசியோ புச்சி (Ignazio Fucci) என்ற எட்டு வயது சிறுவனையும், அவனது பெற்றோரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

உணவுக் குழாயில் அரிய வகையான குறையுள்ள சிறுவன் புச்சியைப் போல் துன்புறும் சிறுவர்கள், உலகில், 40 பேர் என்ற அளவிலேயே உள்ளனர் என்றும், இத்தாலியில் இவ்வகை நோயுள்ள ஒரே சிறுவன் புச்சி என்றும், UNITALSI என்ற பிறரன்புப்பணி அமைப்பினர் தலைவர் Emanuele Trancalini அவர்கள் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்னர், சிறுவன் புச்சி, திருத்தந்தையின் செபங்களுக்காக விண்ணப்பித்து எழுதியிருந்த மடலுக்கு பதிலளித்த திருத்தந்தை, அச்சிறுவனின் குடும்பத்தை சாந்தா மார்த்தா இல்லத்திற்கு அழைத்திருந்தார். 

சிறுவனோடும், பெற்றோருடனும் திருத்தந்தை செலவிட்ட நேரத்தில், கடவுள் மீது தாங்கள் கொண்ட கோபம் குறித்து இஞ்ஞாசியோவின் பெற்றோர் திருத்தந்தையிடம் பேசியதாகவும், கடவுள் மீது அவர்கள் கொண்டிருக்கும் கோபத்தையும் செபமாக மாற்றும்படி திருத்தந்தை அவர்களுக்குக் கூறியதாகவும் UNITALSI அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

UNITALSI அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அற்றும் பணியைக் குறித்து பாராட்டியத் திருத்தந்தை, சிறுவன் இஞ்ஞாசியோவையும், அவன் பெற்றோரையும் சிறப்பாக ஆசீர்வதித்து, தனக்காக வேண்டும்படிக் கேட்டுக் கொண்டார் என்று UNITALSI தலைவர் Trancalini அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.