2016-03-31 16:03:00

சமநிலையற்ற ஏற்றத்தாழ்வு உறுதியான வளர்ச்சிக்குத் தடை


மார்ச்,31,2016. வளர்ச்சி குறைந்த வறிய நாடுகள், வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் என வேறுபாடு ஏதுமின்றி, உலகெங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சனை, மனிதர்களிடையே நிலவும் சமநிலையற்ற ஏற்றத் தாழ்வு என்று ஐ.நா.வின் இணைப் பொதுச் செயலர், Jan Eliasson அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமுதாயக் குழு இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய Eliasson அவர்கள், 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு, ஏற்றத் தாழ்வுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று கூறினார்.

ஊதியம், சேமிப்பில் உள்ள செல்வம், வாய்ப்புக்கள் என்ற பல வழிகளிலும் மனிதர்கள் சந்திக்கும் சமநிலையற்ற சூழல், உலக முன்னேற்றத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது என்று Eliasson அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவரும் இந்த ஏற்றத்தாழ்வு நிலையை சரி செய்வதற்கு, அரசுகள் உறுதியான தீர்மானத்துடன் செயல்படவேண்டும் என்று ஐ.நா. இணை பொதுச் செயலர் Eliasson அவர்கள் இக்கூட்டத்தில் விண்ணப்பித்தார்.

உலகில் இன்று வாழும் 10பேரில் ஏழுபேர் ஏற்றத் தாழ்வுகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு, உலகின் அனைத்து நாடுகளிலும் இப்பிரச்சனை வளர்ந்துள்ளது என்றும் Eliasson அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.