2016-03-31 16:29:00

உலகளவில் பல்லாயிரம் டன் போலி உணவுப் பொருட்கள் பறிமுதல்


மார்ச்,31,2016. பல நாடுகளில் வேதியப்பொருள் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் போலி உணவுப் பொருட்கள் பல்லயிரம் டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை தகவல் அளித்துள்ளது.

உலகளவில் கடந்த ஆண்டு மட்டும் கலப்படம் செய்யப்பட்ட அல்லது நச்சுத்தன்மையுள்ள பல்லாயிரம் டன் உணவுப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என இன்டர்போல் அமைப்பு கூறுகிறது.

சூடானில் சர்க்கரையில் உரம் கலப்படம், இந்தோனேஷியாவில் ஃபார்மால்டிஹைட் வேதியப்பொருளில் பாதுகாக்கப்பட்ட கோழி இறைச்சி போன்றவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளதாக அனைத்துலக காவல்துறை அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இதேபோல் பளபளப்பாகக் காட்டும் நோக்கத்தில் ஒலிவக் காய்களில் தாமிர சல்பேட் பூசப்பட்டிருந்ததை இத்தாலியக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரி, ருமேனியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் போலி சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலுள்ள சிறார்களை இலக்குவைத்து ஏற்றுமதி செய்யப்படவிருந்தன என்று இன்டர்போல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.