2016-03-31 12:54:00

இது இரக்கத்தின் காலம்:இறந்த மகன்களிடம்மன்னிப்புக்கோரும் தாய்


சேலம் அருகேயுள்ள செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த கண்ணம்மா அவர்கள், பிறக்கும் முன்னரே தனது தந்தையால் கைவிடப்பட்டவர். இவர் வறுமையின் படியில், பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். கூலித்தொழிலாளி கண்ணன் என்பவரை மணந்த இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் நள்ளிரவில், பசியின் காரணமாக, தனது குழந்தைகளின் அழுகையைப் பொறுக்க முடியாத இவர், அருகேயிருந்த விவசாயக் கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வகையில் கிணற்றில் குதித்தார். கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால், கண்ணம்மா மட்டும் உயிர் பிழைத்தார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணம்மா அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவரின் நிலையை அறிந்த மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் அவருக்கு உதவ முன்வந்தனர். 90 நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வந்த கண்ணம்மா, தனது கணவருடன் இணைந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அவ்வமைப்பினர் ஏற்பாடு செய்தனர். முதலில் யாருடனும் பேசாமல் இருந்த கண்ணம்மா,  தொடர் மனநல சிகிச்சைக்குப் பிறகு மெல்ல மெல்ல சாதாரண நிலைக்குத் திரும்பினார். அவர்களுக்கு மீண்டும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு கண்ணம்மாவுக்கு மூன்று ஆயுள்தண்டனையை விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கண்ணம்மா உடைந்தே போய்விட்டார். தனது குழந்தையை யாரிடமும் கொடுக்காமல், தன்னுடனேயே சிறைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து கண்ணம்மாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து, அந்த அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கண்ணம்மாவுக்கு விடுதலை கிடைத்தது. இதையடுத்து சேலம் அருகேயுள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்த கண்ணம்மா, தற்போது அமைதியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். கண்ணீர் ததும்ப கண்ணம்மா கூறியுள்ளார் - இறந்துபோன எனது மகன்களின் புகைப்படம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் அவர்களிடம் நான் நாள்தோறும் மன்னிப்பு கேட்டு வருகிறேன் என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.