2016-03-31 14:54:00

அன்னை அஞ்செலிக்கா இப்போது நமக்காக வேண்டி வருகிறார்


மார்ச்,31,2016. உயிர்ப்பு ஞாயிறன்று இவ்வுலகைவிட்டுச் சென்ற அன்னை அஞ்செலிக்கா அவர்களுக்காக நாம் வேண்டுவதைக் காட்டிலும், அவர் நமக்காக இப்போது வேண்டி வருகிறார் என்று சொல்வதே பொருத்தம் என்று, திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் CNA கத்தோலிக்க செய்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடம் கூறினார்.

ஏப்ரல் முதல் தேதி, இவ்வெள்ளிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டில், அன்னை அஞ்செலிக்கா அவர்களின் அடக்கத் திருப்பலி நிகழும் அதே வேளையில், உரோம் நகரில் வத்திக்கானுக்குள் அமைந்துள்ள புனித அன்னா பங்குக் கோவிலில் நிகழும் திருப்பலியில் தான் கலந்துகொள்ளப்போவதாக, அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

மிக எளிமையானச் சூழலில் துவங்கிய நற்செய்தி அறிவிப்புப் பணி, உலகெங்கும் அறியப்படும் அளவு உழைத்த அன்னை அஞ்செலிக்கா அவர்கள், 'எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்.28:19) என்று இயேசு விடுத்த பணிக்கு தலைசிறந்த கருவியாக அமைந்தார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள் கூறினார்.

பிரான்சிஸ்கன் குழுமத்தின் ஓர் அங்கமான வறிய கிளாரா சகோதரிகள் சபையைச் சேர்ந்த அன்னை அஞ்செலிக்கா அவர்கள், 1981ம் ஆண்டு, EWTN என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமா மாநிலத்தில் துவக்கினார்.

கத்தோலிக்க உலகில், ஊடகத்துறையில் முதன்மை நிலை வகிக்கும் இந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிய அன்னை அஞ்செலிக்கா அவர்கள், மார்ச், 27, உயிர்ப்பு ஞாயிறன்று தன் 92வது வயதில் இறையடி சேர்ந்தார்.

EWTN நிறுவனம், உலகின் பல பகுதிகளில், 215 தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் வழியே நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்நிறுவனத்தின் பணிகளால், 26 கோடிக்கும் அதிகமானோர் பயனடைகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.