2016-03-30 15:44:00

துணிவுடன் செயலாற்றும் பெண்களுக்கு திருப்பீடத்தின் மரியாதை


மார்ச்,30,2016. மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கென, பெண்கள் பல துறைகளில் உழைத்து வருவதை இவ்வுலகம் வெளிப்படையாகக் கண்டுவருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'பெண்கள், அமைதி, மற்றும் பாதுகாப்பு' என்ற மையக்கருத்துடன், ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொண்ட ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட பேராயர், பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

குடும்பம், மதநம்பிக்கைக் குழுமங்கள், மனிதாபிமான முயற்சிகள், கல்வி மற்றும் நலவாழ்வுப் பணிகள், அமைதி முயற்சிகள் என்று, பல்வேறு துறைகளில், பெண்கள் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அடக்கியாளும் பல நாடுகளில், துணிவுடன், அமைதியாகச் செயலாற்றிவரும் பெண்களுக்கு, திருப்பீடம், மரியாதை கலந்த வணக்கம் செலுத்துகிறது என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஏமன் நாட்டில் கொல்லப்பட்ட நான்கு அருள்சகோதரிகளையும் தன் உரையில் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், வறுமைப்பட்ட வயதான பெண்களுக்கு, இவ்வருள் சகோதரிகள் ஆற்றிவந்த பணியை, இன்று உலகம் முழுவதும் அறிந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.

இனப் படுகொலைகள் பெருகியுள்ள ஆப்ரிக்க நாடுகளில், துன்புறுவோருக்கு உதவிகள் செய்வதிலும், அந்நாடுகளில் அமைதியை உறுதிப்படுத்துவதிலும் அயராது உழைத்துவரும் பெண்களுக்கு அனைத்து ஆதரவையும் திருப்பீடம் வழங்கி வருகிறது என்றும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.