2016-03-30 15:53:00

திருப்பீடம், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை உறவில் வளர்ச்சி


மார்ச்,30,2016. திருப்பீடத்திற்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையேயுள்ள உறவு, கடந்த 25 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்று, இரஷ்யக் கூட்டமைப்புக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ivan Jurkovic அவர்கள் கூறினார்.

மாஸ்கோ திருப்பீடத் தூதரகத்தில் ஒன்பது ஆண்டுகள் (1992-1996, 2011-2016) தங்கி, பணியாற்றிய அனுபவத்தை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட பேராயர் Jurkovic அவர்கள், சோவியத் யூனியன் கலைந்தது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவரான மாஸ்கோ முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கும் இடையே கியூபாவில் இடம்பெற்ற சந்திப்பு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிப் பேசினார்.

வருகிற அக்டோபரில், மாஸ்கோ முதுபெரும் தந்தையும், பில்லி கிரகாம் அவர்களின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ இயக்கமும் இணைந்து நடத்தவுள்ள மாபெரும் கிறிஸ்தவ கருத்தரங்கிற்குத் திருப்பீடம் தனது பிரதிநிதிகளை பெருமளவில் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார் பேராயர் Jurkovic.

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இடம்பெறும் உரையாடல், இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அரசியல் உரையாடலுக்கு வழியமைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் Jurkovic.  

64 வயது நிரம்பிய பேராயர் Ivan Jurkovic அவர்கள், தற்போது ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆதாரம் : Asianews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.