2016-03-30 15:51:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை : புது இதயம் தாரும் இறைவா!


கிறிஸ்து உயிர்ப்பு விழாக்காலம் தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், இப்புதனன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, 'இரக்கம் என்பது பாவத்தை  இல்லாமல் ஆக்குகிறது' என்ற தலைப்பில் மறைக்கல்வி உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் இடம்பெறும் இந்த மறைக்கல்வி தொடரில், பழைய ஏற்பாட்டு நூலைத் தொடர்புப்படுத்தி இரக்கத்தைக் குறித்து சிந்தித்து வரும் நாம், இன்று, பழைய ஏற்பாடு குறித்த இறுதி உரையாக, திருப்பாடல் 51 குறித்து நோக்குவோம்.

உரியாவின் மனைவி பத்சேபாவுடன் பாவம் செய்தபின், அதற்கு மன்னிப்பை வேண்டும், மன்னர் தாவீதின் செபமாக, பாரம்பரியமாக இந்த 51ம் திருப்பாடல் நோக்கப்படுகிறது. "கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்" என வரும் இத்திருப்பாடலின் துவக்க வரிகள், பாவத்தை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதையும், பாவத்திற்காக மனம் வருந்துவதையும், இறைவனின் இரக்கம் நிறைந்த மன்னிப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. தன் பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துமாறு, இதயத்தின் ஆழத்திலிருந்து திருப்பாடல் ஆசிரியர் எழுப்பும் இந்த விண்ணப்பத்துடன், இறைவனின் முடிவற்ற நீதியையும், புனிதத்துவத்தையும் குறித்து புகழ்ந்தும் பாடுகிறார். தன்னுடைய பெரும்பாவத்திற்கு மன்னிப்பை வேண்டும் திருப்பாடல் ஆசிரியர், அதேவேளை, தூயதோர் உள்ளத்தையும், உறுதி தரும் ஆவியையும் தன்னுள்ளே உருவாக்குமாறு இறைவனை இறைஞ்சுகிறார்.

பாவங்கள் கழுவப்பட்டு புதுப்பிக்கப்படும் இவர், அதன் வழியாக ஏனையோருக்கு இறைவழிகளைக் கற்பித்து, அவர்கள், நீதி நேர்மையை நோக்கித் திரும்புவதற்கு உதவ முடியும். இறைவனின் அளவற்ற கருணையின் மிகப்பெரும் அடையாளமே, அவரின் மன்னிப்பு. இரக்கத்தின் அன்னையாகிய நமதன்னை மரியா அவர்களின் செபத்தின் வழியாக, நாமனைவரும் தெய்வீகக் கருணையின், மேலும் நம்பத்தகும் சாட்சியங்களாக மாறுவோமாக. இந்த தெய்வீக இரக்கமே, நம் பாவங்களை மன்னிக்கிறது, நம்மில் புது இதயத்தைப் படைக்கிறது, மற்றும், இறைவனின் ஒப்புரவு அன்பை உலகிற்கு எடுத்துரைக்க, நம்மைத் தூண்டுகிறது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.