2016-03-30 16:01:00

அமைதி ஆர்வலர்கள் : 2011ல் நொபெல் அமைதி விருது


மார்ச்,31,2016. “உங்களின் கனவுகளை அடைவதற்கு, நீங்கள் அவற்றைக் காணும்போது உள்ள உங்கள் திறனைவிட அவற்றின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகள் உங்களை மிரளச்செய்யவில்லையெனில், அவை போதுமான அளவு பெரியவை அல்ல. சில நாடுகள் தங்களின் மிகவும் உண்மையான மற்றும் கடுமையான பிரச்சனைகளையும் பொருட்படுத்தாது, ஒப்புரவு, மீண்டெழுதல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லும்போது, பிற நாடுகளால் அது இயலாமல் இருக்கின்றதே? இந்தக் கேள்விகள் ஆப்ரிக்காவுக்கு மிக முக்கியானவை. அவற்றுக்கானப் பதில்கள் சிக்கலானவை மற்றும் தெளிவற்றவை. சில வேளைகளில் மனிதர்களின் பண்புகள் அவர்கள் வளர்ந்த சூழல்களால் பண்படுத்தப்படுகின்றன என்று நான் நம்புகிறேன்”. 

இவ்வாறு சொன்னவர் ஆப்ரிக்கக் கண்டத்தின் முதல் பெண் அரசுத்தலைவர் எல்லென் ஜான்சன் சர்லீப் (Ellen Johnson Sirleaf). இவருக்கும், Leymah Gbowee, Tawakkol Karman ஆகிய இருவருக்கும் 2011ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. எல்லென் ஜான்சன் சர்லீப் அவர்களின் தாய் நாடான லைபீரியா, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து விடுதலை பெற்ற அடிமைகளால் 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்நாட்டுத் தலைநகர் மொன்ரோவியாவில் 1938ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பிறந்தார் எல்லென் ஜான்சன். லைபீரியப் பூர்வீக மக்களுக்கும், அமெரிக்காவிலிருந்து அந்நாட்டில் குடியேறிய மக்களுக்கும் இடையே பதட்டநிலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தன. எல்லென் ஜான்சன் அவர்களின் மூன்று தாத்தா பாட்டிகள் லைபீரியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரின் தாய்வழி தாத்தா ஜெர்மன் நாட்டு வர்த்தகர். இவர் முதல் உலகப் போரின்போது லைபீரியாவை விட்டுச் சென்றார். எல்லென் ஜான்சன் அவர்களின் தாய் ஓர் ஆசிரியர். தந்தை ஒரு வழக்கறிஞர். எனவே இத்தம்பதியர் தங்களின் மகளுக்கு கல்வியின்மீது உயர்ந்த மதிப்பீட்டை விதைத்திருந்தனர்.

தனது 17வது வயதில் ஜேம்ஸ் சர்லீப் என்பவரை மணந்து நான்கு மகன்களை அடுத்தடுத்துப் பெற்றெடுத்தார் எல்லென் ஜான்சன். இவரது கணவர் லைபீரிய வேளாண் துறையில் பணியாற்றினார். குடும்ப வருவாயை அதிகரிப்பதற்காக, எல்லென் ஜான்சன் அவர்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றில் கணக்கர் வேலையில் சேர்ந்தார். இவரது கணவர் அமெரிக்காவில் படிப்பதற்கு வாய்ப்பு வந்தபோது, எல்லென் ஜான்சன் அவர்களும் தனது மகன்களை பெற்றோரிடம் விட்டுவிட்டுக் கணவருடன் சென்றார். அமெரிக்காவில், இவரது கணவர் விஸ்கான்சின் வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டயம் பெற்றபோது, இவர் Madison வர்த்தகக் கல்லூரியில் வணிகயியல் படித்தார். இத்தம்பதியர் படிப்பை முடித்து லைபீரியா திரும்பினர். சர்லீப் வேளாண் துறையில் பணியில் சேர்ந்தார். அதேநேரம், 1965ம் ஆண்டில் எல்லென் ஜான்சன் அவர்கள் நாட்டின் பொதுவருவாய்த் துறையில் வேலையில் சேர்ந்தார். இத்துறை பின்னாளில் நிதி அமைச்சகமாகப் பெயர் மாறியது. இவ்வாறு சர்லீப் தம்பதியர் அரசுப் பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, சர்லீப் அவர்களின் நடவடிக்கைகளில், வன்முறையும், உரிமை மீறல்களும் தலைதூக்கின. எனவே திருமண முறிவைப் பெற்றார் எல்லென் ஜான்சன்.

திருமண முறிவுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்று கொலரோடா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரயியலிலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்திலும் 1971ம் ஆண்டில் பட்டயங்களைப் பெற்றார் எல்லென் ஜான்சன்.   அதற்கு அடுத்த ஆண்டில் லைபீரியாவில் உதவி நிதி அமைச்சரானார். மேற்கு ஆப்ரிக்கக் கல்லூரியில் தொடக்க உரையாற்றியபோதும், பிற தருணங்களிலும் அப்போதைய அரசுத்தலைவர் வில்லியம் டோல்பெர்ட் (William Tolbert) அவர்களின் நிர்வாகக் கொள்கைகளைப் பொதுப்படையாக விமர்சித்தார். இதனால், தேசிய அளவில் பலரின் கவனம் இவரின் பக்கம் திரும்பியது. இது, எல்லென் ஜான்சன் அவர்களுக்கும், அவரின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இறுக்கத்தை உருவாக்கியது. மீண்டும் அமெரிக்கா சென்று வாஷிங்டனில் உலக வங்கியில் வேலையில் சேர்ந்தார் எல்லென் ஜான்சன். 1977ம் ஆண்டில் லைபீரியா திரும்பி உதவி நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1979ல் நாட்டில் அரிசிப் பற்றாக்குறையால் மொன்ரோவியா தெருக்களில் கலவரங்கள் வெடித்தன. அரசு அடக்குமுறைகளைக் கையாண்டது. அரசுத்தலைவர் டோல்பெர்ட், நிதி அமைச்சரை நீக்கிவிட்டு, எல்லென் ஜான்சன் அவர்களை நிதி அமைச்சராக்கினார். லைபீரியாவில் இநதப் பதவியை வகித்த முதல் பெண் இவர். அப்போது நாட்டின் நிதித்துறையில் அதிகமாகத் தேவைப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் எல்லென் ஜான்சன்.      

1980ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, இராணுவ அதிபர் சாமுவேல் டோ நடத்திய  ஆட்சிக்கவிழ்ப்பில் அரசுத்தலைவர் டோல்பெர்ட்டும், அவரின் இருபது ஆதரவாளர்களும் அதே நாளில் கொல்லப்பட்டனர். பத்து நாள்கள் சென்று, டோல்பெர்ட் அவர்களின் 13 அமைச்சரவை உறுப்பினர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயினும், எல்லென் ஜான்சன் அவர்களும், இன்னும் மூன்று அமைச்சகர்களும் உயிர் தப்பினர். லைபீரியாவில், டோவை எதிர்ப்பவர்களின் வாழ்வு மிகவும் ஆபத்தானதாக மாறியது. வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கான லைபீரிய வங்கியின் தலைவராகப் பணியாற்றினார் எல்லென் ஜான்சன். ஆனால் நிலைமை மோசமடையவே ஆப்ரிக்காவைவிட்டு வெளியேறினார் அவர். சில காலம் சென்று மீண்டும் ஆப்ரிக்கா திரும்பி நைரோபியில் வேலை செய்தார். இதற்கிடையே, இராணுவ அதிபர் சாமுவேல் டோ, தனது ஆட்சிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைப்பதற்காக, 1985ம் ஆண்டில் தேர்தலை அறிவித்தார். எல்லென் ஜான்சன் அவர்கள் உதவி அரசுத்தலைவர் வேட்பாளராக தன்னை அறிவித்தார். இதனால் இவர் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். உலக சமுதாயம் கொடுத்த அழுத்தத்தில், இவரின் தண்டனையை மன்னித்தார் டோ. தேர்தலில் எல்லென் ஜான்சன் அவர்களின் பெயர், உதவி அரசுத்தலைவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், செனட் அவைக்கு நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டார். இதில் இவர் வெற்றி பெற்றாலும், இத்தேர்தல், ஊழல் என்று சொல்லி இதனை ஏற்க மறுத்தார். 1985ம் ஆண்டு நவம்பரில் இவர் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு ஜூலையில் இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறி வாஷிங்டன் சென்றார். நாட்டிற்கு வெளியே இருந்துகொண்டு லைபீரியாவின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வந்தார் எல்லென் ஜான்சன்.

அதிபர் டோவின் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து ஆட்சிக்கவிழ்ப்புகள் நடந்தன. எதிர்தரப்புத் தலைவர்கள் சட்டத்திற்குப் புறம்பே கொல்லப்பட்டனர். 1989ம் ஆண்டில், அதிபர் டோவின் முன்னாள் கூட்டணியாளர் சார்லஸ் டெய்லர், டோவுக்கு எதிராக, ஆயுதம் ஏந்திய ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தினார். 1990ம் ஆண்டில் சில புரட்சியாளர்கள் சாமுவேல் டோவைச் சித்ரவதை செய்து கொலை செய்ததை தலைநகரில் ஒலிபரப்பினர். இதற்கிடையே, எல்லன் ஜான்சன் அவர்கள், ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்பில் சேர்ந்தார். இப்பணியில் சேர்ந்த முதல் ஆப்ரிக்கப் பெண் இவர். 1996ல் ஆப்ரிக்க நாடுகளின் முயற்சியால் லைபீரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்கு வன்முறை நீடித்தது. அரசுத்தலைவர் டெய்லரின் ஆட்சி, வன்முறையும் ஊழலும் அடக்குமுறையும் நிறைந்ததாய் இருந்தது. டெய்லர், லைபீரியாவை பிற அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடுத்தினார். ஆயுதம் ஏந்திய புரட்சிக் குழுக்களின் தாக்குதல்கள் மற்றும் அனைத்துலக வற்புறுத்தலால் பதவியை விட்டு விலகி 2003ல் நைஜீரியாவுக்குத் தப்பிச் சென்றார் டெய்லர். அதே ஆண்டில் லைபீரியா திரும்பிய எல்லென் ஜான்சன் அவர்கள், இடைக்கால அரசுக்குத் தலைமை தாங்கினார். 2005ம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தி, 2006ம் ஆண்டு சனவரி 16ம் தேதி லைபீரியாவின் 24வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார் எல்லென் ஜான்சன். ஆப்ரிக்க வரலாற்றில் ஒரு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்.

தனது முதல் ஐந்தாண்டுகள் பதவிக்காலத்தில், லைபீரியாவில் 25 ஆண்டுகளாக இடம்பெற்ற வன்முறை மற்றும் தவறான ஆட்சிமுறைகளைச் சீரமைப்பதில் செலவிட்டார் எல்லென் ஜான்சன். லைபீரியாவுக்கு எதிரான அனைத்துலக வர்த்தகத் தடை நீங்கச் செய்தார். நாட்டின் வெளிநாட்டுக் கடன் முழுமையாக மன்னிக்கப்படச் செய்தார். இலவச ஆரம்பக் கல்வியைக் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கச் செய்தார். நாட்டின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தினார். 800 மைல்களுக்குச் சாலைகள் போட்டார். வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழி அமைத்தார். உலகின் பத்து சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர் என்று, 2010ம் ஆண்டில் நியூஸ்வீக் இதழ் தேர்ந்தெடுத்தது. லைபீரியாவின் சிறந்த அரசுத்தலைவர் என்று பொருளாதார இதழ் குறித்தது. 2011ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதையும் எல்லென் ஜான்சன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். 2013ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்திரா காந்தி விருதை, இந்திய அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கினார். உலகின் எழுபதாவது அதிக வல்லமைமிக்கப் பெண் இவர் என்று ஃபோர்பெர்ஸ் இதழ் 2014ம் ஆண்டில் குறித்தது. “உங்கள் கனவுகள், உங்களை மிரளச்செய்யாவிடில், அவை போதுமானதாக இல்லை என்றே பொருள்” என்றுரைத்தவர் எல்லென் ஜான்சன் சர்லீப். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.