2016-03-30 16:15:00

அடிப்படைவாதத்தை அகற்ற பாகிஸ்தான் ஆயர்கள் விண்ணப்பம்


மார்ச்,30,2016. மாசற்ற மக்களை, மதத்தின் பெயரால் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இத்தகையக் கொடுமைகள் நிகழும்போது, இராணுவத்தின் உதவியுடன் அரசு செயல்படுவது மட்டும் போதாது, மாறாக, இக்கொடுமைகள் நிகழ்வதற்குக் காரணமாக விளங்கும் அடிப்படைவாதப் போக்கினை, நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கு, பாகிஸ்தான் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, ஆயர் அர்ஷத் அவர்களின் அறிக்கை கூறுகிறது.

நாட்டின் சட்டங்களைத் துச்சமாக எண்ணி, செயல்படுவோரை, நீதிக்கு முன் கொணர்வதற்கு, அரசு, விரைவாகவும், நாடுதழுவிய பெரிய அளவிலும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் சார்பில், ஆயர் அர்ஷத் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

வாழ்வு என்பது நிச்சயமற்றது என்ற கசப்பான உண்மையை, பாகிஸ்தான் மக்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் இத்தகைய கொடுமைகளின் நடுவில், சகிப்புத்தன்மை, அமைதி ஆகிய உணர்வுகளில் மக்கள் வளர்வதற்கு இறைவன் உதவி செய்யவேண்டும் என்று, ஆயர் அர்ஷத் அவர்கள், தன் அறிக்கையில் வேண்டுதலை எழுப்பியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.