2016-03-29 15:11:00

லாகூர் பூங்கா வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு வழிபாடு


மார்ச்,29,2016. பாகிஸ்தானின் லாகூர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான மக்கள், தாக்குதல் நடந்த அதே பூங்கா வாசலில், மெழுகுத்திரிகளை ஏந்தி, வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

லாகூரின் குல்ஷான் இ இக்பால் பூங்காவில், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விடுமுறைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஏறத்தாழ 300 பேர் காயமுடைந்துள்ள நிலையில், பல மதத்தினர் இணைந்து திங்களிரவு, அதே பூங்கா வாசலில். மெழுகுத்திரிகளை ஏந்தி, வழிபாட்டை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக பேசி வருவது மட்டும் போதாது, தீவிரவாதத்தை அடக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த வழிபாட்டில் கலந்துகொண்டோர் குரலெழுப்பினர்.

பாகிஸ்தான் குழந்தைகள் எப்போதும் அச்சத்திலும் திகிலிலும் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்பதால், நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார், பாகிஸ்தான் பல்சமய அவையின் தலைவர் சாம்சன் சலமாட்.

இதற்கிடையே, இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று செய்தி வெளியிட்டுள்ள ஜமாத் உல் அஹ்ரார் தீவிரவாத அமைப்பு, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விடுமுறையைச் சிறப்பித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை தாக்குவதே தங்கள் நோக்கம் என்றும், இதில் எதிர்பாராத விதமாக சில இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும் தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.