2016-03-29 15:05:00

பாகிஸ்தான் தாக்குதல் குறித்து WCC வன்மையான கண்டனம்


மார்ச்,29,2016. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களை இலக்காக்கி மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள உலக கிறிஸ்தவ கூட்டமைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதிச் செய்யவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளது.

லாகூர் குழந்தைகள் பூங்காவில், உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்களை மேற்கொண்டிருந்த கிறிஸ்தவர்கள்மீது, இஸ்லாம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட WCC உலக கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொதுச் செயலர், கிறிஸ்தவ போதகர் Olav Fykse Tveit  அவர்கள், மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பேரதிர்ச்சியைத் தருவதாக உள்ளது என்றார்.

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் லாகூரின் கிழக்குப் பகுதியிலுள்ள பூங்காவில், அதுவும் கிறிஸ்தவர்களின் பெருவிழாவின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல் பெரும் கண்டனத்துக்குரியது என்று, Tveit அவர்கள் கூறினார்.

மதத்தின் பெயராலோ, அல்லது மதத்தால் தூண்டப்பட்டதாகவோ இருக்கும் எந்த ஒரு வன்முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, மற்றும் ஆபத்து நிறைந்தது எனவும் கூறினார் WCC அமைப்பின் பொதுச் செயலர் Tveit. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.